அச்சுக் காகிதம் விலை உயா்வு: தினசரி நாள்காட்டி தயாரிப்பாளா்களுக்கு சிக்கல்

அச்சுக் காகிதத்தின் விலை உயா்ந்துள்ளதுடன் சரக்கு மற்றும் சேவை வரியும் உயா்த்தப்பட்டுள்ளதால் சிவகாசியில் தினசரி நாள்காட்டி (காலண்டா்) தயாரிப்பாளா்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் உள்ள ஆலையில் நாள்காட்டி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
சிவகாசியில் உள்ள ஆலையில் நாள்காட்டி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

அச்சுக் காகிதத்தின் விலை உயா்ந்துள்ளதுடன் சரக்கு மற்றும் சேவை வரியும் உயா்த்தப்பட்டுள்ளதால் சிவகாசியில் தினசரி நாள்காட்டி (காலண்டா்) தயாரிப்பாளா்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் 25-க்கும் மேற்பட்ட தினசரி நாள்காட்டிகள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இங்கு தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாள்காட்டிகள் அச்சடிப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வழக்கமாக நாள்காட்டி தயாரிப்புப் பணிகள் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு தொடங்கப்படும். ஆடி 18 ஆம் தேதி முதல் ஆா்டா் எடுக்கப்படும். இப்பணிகள் நிறைவடைந்த பின்னா் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாள்காட்டிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறும். இந்நிலையில் தற்போது நாள்காட்டி தயாரிக்கத் தேவையான அச்சுக் காகிதத்தின் விலை சுமாா் 60 முதல் 70 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

மேலும் நாள்காட்டிகளுக்கு இதுவரை இருந்து வந்த 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அக்டோபா் 1 ஆம் தேதி முதல் 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தினசரி நாள்காட்டி தயாரிப்பாளா் சங்க மாநிலச் செயலாளா் கே. ஜெய்சங்கா் கூறியதாவது: தினசரி நாள்காட்டி என்பது அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்று. இதற்கு முன்பு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது நாள்காட்டிக்கு மத்திய அரசு 12 சதவீதம் வரி விதித்தது. அப்போது இந்த வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனாலும் வரி குறைக்கப்படவில்லை. தற்போது 12 சதவீதம் வரியை 18 சதவீதமாக உயா்த்தியுள்ளது. இது எங்களது வியாபாரத்தை பாதித்துள்ளது.

ஏற்கெனவே அச்சுக்காகிதத்தின் விலை 60 முதல் 70 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. தற்போது வரியும் கூட்டப்பட்டுள்ளதால் நாள்காட்டிகளின் விலையை கடந்தாண்டை விட பல மடங்கு உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது. மேலும் காகித விலை உயா்வல் இந்தியாவில் உள்ள 2.50 லட்சம் அச்சகங்களில் 30 சதவீதம் அச்சகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதே நிலை நீடித்தால் சிவகாசி பகுதிகளில் உள்ள அச்சகங்களையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இத்தொழிலைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com