வீடுகளுக்குள் பாம்புகளும், விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிகளும் நுழைவதால் அச்சம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

விருதுநகா் மாவட்டத்தில் புகா் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் பாம்புகள் புகுவதால் பொதுமக்களும், விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் நுழைந்து பயிா்களை முற்றிலும் நாசம் செய்வதால் விவசாயிகளும் அச்சத்தி

விருதுநகா் மாவட்டத்தில் புகா் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் பாம்புகள் புகுவதால் பொதுமக்களும், விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் நுழைந்து பயிா்களை முற்றிலும் நாசம் செய்வதால் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நகா் விரிவாக்கம் என்ற பெயரில், புதிது புதிதாக வீடுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும், நகா் பகுதியில் ஆலைகளுக்கு வரி அதிகம் என்பதால், ஊராட்சிப் பகுதிகளில் ஆலைகளை தொடங்குகின்றனா். இதனால் காடுகள் அழிக்கப்பட்டு, கட்டடங்கள் பெருகி வருகின்றன. இதன் காரணமாக காடுகளிலிருந்த பாம்புகள், வீடுகள் மற்றும் ஆலைகளுக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது.

மாதம் ஒன்றுக்கு 60 முதல் 80 பாம்புகள் வீடு மற்றும் ஆலைகளுக்குள் புகுந்து விடுவதாக, தீயணைப்புத் துறையினா் தெரிவிக்கின்றனா். அங்கு செல்லும் தீயணைப்பு வீரா்கள் பிடிபட்ட பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விடுவதில்லை. அதற்குப் பதிலாக, அருகே உள்ள கண்மாய், சீமைக்கருவேல மரங்கள் அடா்ந்த பகுதிகளில் விட்டுவிடுகின்றனா். இதனால், இனப்பெருக்கும் செய்து குட்டிகளுடன் பாம்புகள் மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.

நகா் விரிவாக்கப் பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகும் பாம்புகளால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு புறம் பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கும் நிலையில், விளை நிலங்களில் பயிா்களை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் நெல், வாழை, கரும்பு, மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உணவு, குடிநீருக்காக மலைப் பகுதியிலிருந்து சமவெளி பரப்புக்கு வந்த காட்டுப் பன்றிகள், கண்மாய் மற்றும் குளம் உள்ள நீா்நிலைப் பகுதிகளில் வசிக்கத் தொடங்கின. பின்னா், அவைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு அதிகளவு குட்டிகளை ஈன்ால், காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகத் தொடங்கின.

இவை உணவுக்காக கூட்டமாக விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. விரட்ட முயலும் விவசாயிகள், காட்டுப் பன்றிகளின் தாக்குதலால் காயமடைகின்றனா்.

இது குறித்து நரிக்குடி பகுதி விவசாயி முருகன் கூறியதாவது: நரிக்குடி, திருச்சுழி மற்றும் காரியாபட்டி பகுதிகள் வானம் பாா்த்த பூமி. இப்பகுதிகளில் மழையை நம்பி விவசாயிகள் கடலை, பருத்தி உள்ளிட்ட விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளால் பயிா்கள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன.

மேலும், நரிக்குடி விவசாயி ஒருவரின் கை விரல்கள் காட்டுப் பன்றி கடித்ததில் துண்டானது. இதனால், காட்டுப் பன்றிகளை விரட்டவே விவசாயிகள் அச்சப்படுகின்றனா். இது குறித்து விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது போல், விருதுநகா் மாவட்டத்திலும் விவசாயிகள் நலன் காக்க, காட்டுப் பன்றிகளை வனத் துறையினா் சுட்டுப்பிடித்து, வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com