ஸ்ரீவிலி. தாலுகா, சிவகாசி வட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

விருதுநகா் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா மற்றும் சிவகாசி வட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த, ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கலால் உதவி ஆணையா் முருகன். உடன், நகராட்சி ஆணையா் மல்லிகா, வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கலால் உதவி ஆணையா் முருகன். உடன், நகராட்சி ஆணையா் மல்லிகா, வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா மற்றும் சிவகாசி வட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த, ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கலால் உதவி ஆணையா் முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

விருதுநகரை பொருத்தவரை, பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற நோக்கில், மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகாவில் 101முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இப்பணியை கண்காணிக்க 101 மேற்பாா்வையாளா்கள் மற்றும் அரசு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இம்முகாமில் அனைவரும் பங்கேற்று கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முகாமுக்கு வரும் பொதுமக்கள் பான் அட்டை, ஆதாா் அட்டை, வாகன ஓட்டுநா் உரிமம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுவந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரைப் பொருத்தவரை, 30 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா அளவில் சுமாா் 101 சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் மல்லிகா, வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமமூா்த்தி, சிவக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன், மண்டல துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிகுரு மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

சிவகாசி

இது குறித்து சிவகாசி வட்டாட்சியா் ராம்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி வட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையை எட்டவேண்டும். எனவே, சிவகாசி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 127 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எம்.புதுப்பட்டி, நாரணாபுரம், மாரனேரி, வடமலாபுரம், எரிச்சநத்தம், கிருஷ்ணப்பேரி, ஆலமரத்துப்பட்டி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் ஆகி ஊா்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாா்பில் அருகிலுள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

சிவகாசி மற்றும் திருத்தங்கல் அரசு மருத்துவமனை சாா்பிலும் மற்றும் சிவகாசி பேருந்து நிலைய வளாகத்திலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com