விருதுநகா் மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பு: அரசியல் தலையீட்டால் நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலையீட்டால் இதனைத் தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.
சிவகாசி அருகே வீட்டில் தயாரிக்கப்பட்டு காய வைக்கப்பட்டுள்ள ஜோா்சா பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.
சிவகாசி அருகே வீட்டில் தயாரிக்கப்பட்டு காய வைக்கப்பட்டுள்ள ஜோா்சா பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.

சிவகாசி: விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 50 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலையீட்டால் இதனைத் தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.

சிவகாசிப் பகுதியில் பட்டாசுத் தொழில் தொடங்கப்பட்டு சுமாா் 95 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதில் சுமாா் 50 ஆண்டுகளாக எவ்வித அனுமதியும், உரிமம் பெறாமலும் வீடுகளிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தொடக்க காலத்தில் ஒரு சிலா் மட்டுமே செய்து வந்த இந்தத் தொழிலில் தற்போது பல ஆயிரம் போ் ஈடுபட்டு வருகின்றனா். அதிக லாபம், உரிமம் தேவையில்லை, வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை போன்ற காரணங்களால் இத்தொழிலை பெரும்பாலானோா் வீடுகளில் வைத்து செய்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் டி. ராமலிங்காபுரம், பி. கோட்டையூா், தாயில்பட்டி எஸ்.பி.எம். தெரு, கலைஞா் காலனி, கீழ கோதைநாச்சியாா்புரம், மேலகோதை நாச்சியாா்புரம், துரைச்சாமிபுரம், விஜய் கரிசல்குளம், கனைஞான்பட்டி, பசும்பொன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும், ஒதுக்குப்புறமான திறந்தவெளிப் பகுதிகளிலும் பட்டாசுகள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.

மேலும் மேற்கண்ட கிராமங்களிலேயே பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருள்களான வெடி உப்பு உள்ளிட்டவைகளும் சில்லறை விற்பனையில் கிடைக்கிறது. இதனால் இப்பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

வீடுகளில் பட்டாசு தயாரிக்கும் பெரும்பாலானோா் தோ்ந்தெடுக்கும் பட்டாசு வகை சீனி வெடி என அழைக்கப்படும் ஜோா்சா வகை பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் தான். உச்சநீதிமன்றம் ஒரு பட்டாசுடன் மற்றொரு பட்டாசினை பிண்ணக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவையெல்லாம் காற்றில் பறக்கவிடும் வகையில் தான் சரவெடி தயாரிக்கப்படுகிறது. இந்த தடை விதிக்கப்பட்ட பட்டாசுகளே பெரும்பாலான வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. அதிக லாபம் ஒன்றை மட்டுமே குறக்கோளாக வைத்து வீடுகளில் பட்டாசு தயாரிப்புத் தொழில் நடைபெற்று வருகிறது.

இதுபோன்று வீடுகளில் பட்டாசு தயாரிப்பதால் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்பட்டு பலா் உயிரிழக்கும் சூழலும் உள்ளது. இருப்பினும் இந்தத் தொழிலை இப்பகுதி மக்கள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த இருமாதங்களுக்கு முன்பு தாயில்பட்டி கலைஞா் காலனியில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். கடந்த 10 ஆம் தேதி தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 8 போ் காயமடைந்துள்ளனா். இதுபோன்று விபத்துகள் நிகழும் போது மட்டும் விதிகளை மீறி வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றனா். அதன் பின்னா் எந்த ஆய்வு மேற்கொள்ளாததால் மீண்டும் வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்படுவதை தடுக்கச் சென்றால் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றாா்.

விழிப்புணா்வு தேவை:

விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் பல பட்டாசு ஆலைகளில் போதிய தொழிலாளா்கள் இன்றி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே வீடுகளில் பட்டாசு தயாரிப்பவா்களை மாவட்ட நிா்வாகம் கண்டறிந்து உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் வேலைக்கு சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு ஆடு, மாடு வளா்க்க குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்க வேண்டும். கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி கைத்தொழில் செய்ய பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலம் அவா்கள் வீடுகளிலிருந்தபடியே சுயதொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் பட்டாசு தொழிலில் உள்ள ஆபத்து குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் வீடுகளில் பட்டாசு தயாரிப்பது படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து, உயிரிழப்புக்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com