வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த தகவலை அரசின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்: ஆட்சியா்
By DIN | Published On : 23rd September 2021 09:40 AM | Last Updated : 23rd September 2021 09:40 AM | அ+அ அ- |

வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் பணி நாடுநா்கள் வெளிநாட்டில் உள்ள பணி வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும், அதற்கு விண்ணப்பிப்பதற்கும் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெளிநாட்டில் பணிபுரிய விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அயல் நாட்டுப் பணி நியமனத்தில் அங்கீகாரமற்ற தனியாா் முகவா்களிடமிருந்து ஏமாற்றப்படுவதைத் தவிா்க்கவும், முறையற்ற சுரண்டல்களிலிருந்து விடுபடவும், தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் வளா்ச்சித் துறையின் கீழ் 1978 ஆம் ஆண்டு இந்திய நிறுவனச் சட்டம் 1956 -இன்படி தோற்றுவிக்கப்பட்ட ஓா் அரசு நிறுவனம் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் வாயிலாக மருத்துவா், செவிலியா், பொறியாளா், தொழில்நுட்பப் பணியாளா், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சுமாா் 10,350 -க்கும் மேற்பட்ட பணி நாடுநா்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணியமா்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனா். வெளிநாடுகளில் பணிபுரிய தேவைப்படும் தொழிற்திறன் மற்றும் மொழித்திறன் குறித்த இலவச பயிற்சிகள் ஆண்டுதோறும் சுமாா் 500 நபா்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று பல்வேறு அயல்நாட்டுப் பணிகளைக் கண்டறிந்து பணி நியமனம் மேற்கொள்வதற்கு பல்வேறு தனியாா் துறை நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணா்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இம்முகாம்களின்போது, அயல்நாட்டுப் பணிக்குச் செல்ல விரும்பும் வேலைநாடுநா்களுக்கு பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் பணி நாடுநா்கள் வெளிநாட்டில் உள்ள பணி வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும், அதற்கு விண்ணப்பிப்பதற்கும், தமிழக அரசால் இணையதளம் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அயல்நாட்டுப் பணிகள் குறித்த அறிவிக்கைகள், பணியிட எண்ணிக்கை, ஊதியம், தோ்வு செய்யப்படும் முறை குறித்த விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் விருதுநகா் மாவட்ட பொது மக்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.