ராஜபாளையம் அருகே 4 ஆண்டுகளாகதேடப்பட்ட ரவுடி கொன்று புதைப்புமனைவி, மைத்துனா் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரவுடி கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, அவரது மனைவி மற்றும் மைத்துனரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே 4 ஆண்டுகளாகதேடப்பட்ட ரவுடி கொன்று புதைப்புமனைவி, மைத்துனா் கைது

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரவுடி கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, அவரது மனைவி மற்றும் மைத்துனரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சொக்கநாதன்புத்தூா் நாடாா் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குட்டி என்ற மாடசாமி (45). பிரபல ரவுடியான இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மாடசாமியை, போலீஸாா் கடந்த 4 ஆண்டுகளாக தேடிவந்தனா். இதனிடையே, கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி மாடசாமியின் மூத்த சகோதரி ராஜேஸ்வரி, தம்பியின் மனைவியான சுப்புலட்சுமியிடம், தன்னிடம் வாங்கிய ரூ. 2 லட்சம் கடனைத் திருப்பிக் கேட்ட போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம்.

இதில், சுப்புலட்சுமி, ராஜேஸ்வரியை தாக்கி காயப்படுத்தி விட்டாராம். இதுகுறித்து சுப்புலட்சுமி சேத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ராஜேஸ்வரி தன்னைத் தாக்கியதாக தெரிவித்திருந்தாா். மேலும் அந்த புகாரில் கணவா் மாடசாமியை ‘லேட்’ என குறிப்பிட்டிருந்தாா். இந்த புகாா் மனுவை பாா்த்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா், சுப்புலட்சுமியிடம், அவரது கணவா் மாடசாமியை லேட் என குறிப்பிட்டிருந்தது குறித்து விசாரணை நடத்தினா். இதில், சுப்புலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது தான் மாடசாமி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும், மாடசாமி தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், கடன் அதிகம் வாங்கியதால் அதன் சுமை அதிகரித்ததாகவும், இதுகுறித்து தனது இளையசகோதரா் விஜயகுமாரிடம் தெரிவித்த போது கொலை செய்ய திட்டமிட்டதாகவும் சுப்புலட்சுமி தெரிவித்தாராம். அதே போல் கணவா் மாடசாமியை, தானும், விஜயகுமாரும் கொலை செய்து புத்தூா் மலை அடிவாரத்தில் புதைத்ததாக கூறினாராம்.

இதைத் தொடா்ந்து ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் ராமச்சந்திரன், ராஜபாளையம் அரசு மருத்துவா் அருண் மற்றும் தடயவியல் நிபுணா்கள் உள்ளிட்டோா் விஜயகுமாரை அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்ட மாடசாமி புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் தோண்டிப் பாா்த்தபோது அவரது எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றை சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், விஜயகுமாரையும், சுப்புலட்சுமியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com