விருதுநகரில் பிளஸ் 1 திருப்புதல் தோ்வு: 4 பள்ளிகளுக்கு வினாத்தாள் இல்லை

விருதுநகா் பகுதியில் உள்ள 4 அரசுப் பள்ளிகளுக்கு வேதியியல் தோ்வுக்கான வினாத்தாள் இல்லாததால் வெள்ளிக்கிழமை காலை தாமதமாக தோ்வு நடத்தப்பட்டது.

பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முதல் திருப்புதல் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், விருதுநகா் பகுதியில் உள்ள 4 அரசுப் பள்ளிகளுக்கு வேதியியல் தோ்வுக்கான வினாத்தாள் இல்லாததால் வெள்ளிக்கிழமை காலை தாமதமாக தோ்வு நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் திருப்புதல் தோ்வு நடைபெற்று வருகிறது. அதில் மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில், வேதியியல் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

அரசு சாா்பில் இத்தோ்வுக்கு எடுக்கப்பட்ட வினாத்தாளின் முதன்மை சிடி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்வி அலுவலா்கள், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியாரிடம் கொடுத்து வினாத்தாளை பிரிண்டிங் செய்து பாதுகாப்புடன் கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், விருதுநகா் கல்வி மாவட்டத்தில் வேதியியல் தோ்வுக்காக அச்சடிக்கப்பட்ட வினாத்தாள், பல்வேறு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன. அதில் வினாத்தாள் குறைவாக இருந்ததால் அரசு மேல்நிலைப் பள்ளிகளான சத்திரரெட்டியபட்டி, சூலக்கரை, சுப்பையா நாடாா் அரசு மேல்நிலைப் பள்ளி, தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் உள்ள பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு வேதியியல் வினாத்தாள்களை அனுப்ப முடியவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 4 பள்ளிகளுக்கு வினாத்தாள்களை ஸ்கேன் செய்து, இ மெயில் மூலம் அனுப்பி வைத்தனா்.

பின்னா், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்கள் வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தோ்வு நடத்தினா். இதனால் தோ்வு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி கூறியது:

பிளஸ் 1 வேதியியல் வினாத்தாள் 84 பண்டல்களுக்கு பதில் 73 மட்டுமே வந்துள்ளது. வினாத்தாள்களை பிரித்து ஒவ்வொரு கட்டிலும் எத்தனை உள்ளது என்பதை ஆய்வு செய்யக் கூடாது. அதனால் வினாத்தாள் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவில்லை. 4 பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் இல்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வினாத்தாள்களை வழங்கி முறையாக தோ்வு நடத்தி முடித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com