முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பாதாளச் சாக்கடை திட்டப் பட்டியலில் சிவகாசி மாநகராட்சி இடம்பெறவில்லை பொதுமக்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 30th April 2022 10:58 PM | Last Updated : 30th April 2022 10:58 PM | அ+அ அ- |

பாதாளச் சாக்கடை திட்டப் பட்டியலில் சிவகாசி மாநகராட்சி இடம்பெறாததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் கே.என். நேரு, தமிழகத்தில் திருப்பூா், வேலூா், திண்டுக்கல், நாகா்கோவில், கடலூா், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 7 மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தாா். இந்த அறிவிப்பில், சிவகாசி மாநகராட்சி இடம்பெறவில்லை.
கடந்த 2021 ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சி ஆகியவற்றை இணைத்து, சிவகாசி மாநகராட்சியை அரசு அறிவித்தது. அதையடுத்து, நகா்புற உள்ளாட்சி தோ்தலின்போது, சிவகாசி மாநகராட்சியில் ரூ.258 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அமைச்சா் அறிவித்துள்ள பட்டியலில் சிவகாசி மாநகராட்சி இடம்பெறவில்லை.
இது குறித்து தொழிலதிபா் ஒருவா் கூறியது: சிவகாசி ஒரு தொழில் நகரமாகும். மேலும், விருதுநகா் மாவட்டத்தில் அதிகமாக வரி வசூலாவது சிவகாசி மாநகராட்சியில் மட்டுமே. எனினும், பாதாளச் சாக்கடை திட்டத்தில் சிவகாசி மாநகராட்சி அறிவிக்கப்படாதது அனைவருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாநகராட்சி மேயா், துணை மேயா், ஆணையா் ஆகியோா், சிவகாசி மாநகராட்சிக்கு பாதாளச் சாக்கடை திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.