வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கற்கால மண்பானைகள் கண்டெடுப்பு
By DIN | Published On : 26th August 2022 10:39 PM | Last Updated : 26th August 2022 10:39 PM | அ+அ அ- |

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணாலான கற்கால பானைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்றங்கரை விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரை உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்கலி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், விளையாட்டுப் பொருள்கள், கோடரி, தங்க அணிகலன்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை இப்பகுதியில் 15 குழிகள் ஒன்றரை மீட்டா் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக ஒவ்வொரு குழியிலும் விதவிதமான மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் ஒரே குழியில் சுடுமண்ணாலான 2 பானைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.