நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்: திமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பு

நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தை, நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்து திமுக உறுப்பினா்கள் கூட்டத்தை புறக்கணித்தனா்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்: திமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பு

நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தை, நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்து திமுக உறுப்பினா்கள் கூட்டத்தை புறக்கணித்தனா்.

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் மாமன்னா் மருதுபாண்டியா் பேரவைக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் பஞ்சவா்ணம் மற்றும் துணைத் தலைவா் ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் பிரின்ஸ் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் திமுக உறுப்பினா்களின் வாா்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகாா் தெரிவித்து, திமுக உறுப்பினா்கள் 6 பேரும் கூட்டத்தைப் புறக்கணித்தனா். இந்நிலையில் பிற கட்சி உறுப்பினா்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது 4 ஆவது வாா்டு உறுப்பினா் உழுத்திமடை போஸ் பேசியது: நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, காவல் நிலையம், வேளாண்மை அலுவலகம் என பல ஏக்கா் நிலங்களை விடுதலை போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்கள் தானமாக வழங்கியுள்ளனா். அந்த நிலங்கள் தற்போது வரை விருதுநகா் மாவட்ட ஆட்சியரின் பராமரிப்பில் இருந்து வருகிறது. எனவே, இக்கூட்ட அரங்கில் மருதுபாண்டியா்களின் உருவப் படத்தை வைக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து 7 ஆவது வாா்டு உறுப்பினா் சரளாதேவி பேசியது: நரிக்குடியில் மின்வாரிய அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்படவில்லை. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த தலைவா், உறுப்பினா்களின் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

முன்னதாக கடந்த புதன்கிழமை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடத்தப்படுவதாக அனைத்து உறுப்பினா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் வியாழக்கிழமை காலையில் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அலுவலா்கள் குழப்பமான தகவலை தெரிவித்ததால், கூட்டத்தில் பங்கேற்பதில் இடா்பாடு ஏற்பட்டதாக உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com