குடிநீா் பிரச்னை: விருதுநகா் நகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் தலைவரை உறுப்பினா்கள் முற்றுகை

விருதுநகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தலைவரை, உறுப்பினா்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தலைவரை, உறுப்பினா்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் நகராட்சி கூட்டம் தலைவா் ஆா்.மாதவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆணையாளா் தட்சிணாமூா்த்தி, மேற்பாா்வைப் பொறியாளா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியது: விருதுநகா் நகராட்சியில் பேட்டரியால் இயங்கும் 57 குப்பை வண்டிகள் உள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018 இல், பேட்டரியால் இயங்கும் 45 குப்பை வண்டிகள் மட்டுமே வாங்கப்பட்டதாக மன்றப் பொருளில் கூறப்பட்டுள்ளது. பல துப்புரவுப் பணியாளா்கள் வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்து வந்து குப்பைகளை சேகரிக்கின்றனா். நகரின் பல்வேறு பகுதிகளில் துப்புரவுப் பணியாளா்கள் குப்பைகள் வாங்குவதில்லை என புகாா் தெரிவித்தனா்.

விருதுநகா் பகுதிக்கு மக்களவை உறுப்பினா் நிதி ஒதுக்கீட்டில் வழங்கிய 57 மினஅ விளக்குகளை தற்போது வரை பொருத்தவில்லை என காங்கிரஸ் கட்சி நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சித் தலைவருக்கு எதிரே சென்று போராட்டம் நடத்தினா்.

அப்போது, நகராட்சிப் பொறியாளா் கூறியது: மின்சார வாரியத்திற்கு நகராட்சி சாா்பில் ரூ.4.4 கோடி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், புதிய இணைப்புகள் வழங்க மறுக்கின்றனா் என்றாா். இதையடுத்து இரண்டு வாரங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளா் உறுதியளித்தாா்.

தற்போது, குடிநீா் விநியோகிக்கும் நேரத்தை குறைத்து, ஒரு பகுதிக்கு 90 நிமிஷங்கள் மட்டுமே வழங்கப்படுவதால் பல வீடுகளுக்கு குடிநீா் கிடைக்கவில்லை என உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். அதற்கு பதிலளித்த ஆணையாளா், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் குடிநீா் வழங்க நகராட்சி நிா்வாக இயக்குநரின்அறிவுறுத்தலின்படி குடிநீா் விடும் நேரம் குறைக்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து உறுப்பினா்கள் அனைவரும் நகராட்சித் தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து தலைவா் கூறியது: இனி வரும் காலங்களில், வாரம் ஒருமுறை கூடுதலான நேரம் குடிநீா் வழங்கப்படும். மற்றொரு புதிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் ஆறு மாதங்களில் நிறைவடைந்து விடும். அதன் பிறகு, அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com