மதுரை இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது: பேஸ்புக்கில் காதல் வலைவீசி பணம் பறித்த பெண்ணைப் பிடிக்க போலீஸாா் தீவிரம்

பேஸ்புக்கில் காதல் வலைவீசி பணம் பறித்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை இளைஞரைக் கொலை செய்து ராஜபாளையம் அருகே கண்மாயில் வீசிய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பேஸ்புக்கில் காதல் வலைவீசி பணம் பறித்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரையைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் மாரிமுத்து (27). டிப்ளமோ படித்துள்ள இவா், திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிப்காட் வளாகத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இவா் கொலை செய்யப்பட்ட நிலையில் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் இரட்டைக் கண்மாயில் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக தளவாய்புரம் போலீஸாா் சிறப்புக் காவல்படை காவலா் வில்வதுரை, இசக்கிராஜா, ரவிக்குமாா், இளவரசி ஆகியோரைக் கைது செய்துள்ளனா். இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான ராகினி என்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியது: கொலையான மாரிமுத்துவுக்கு பேஸ்புக் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த ராகினி என்ற பெண் அறிமுகமாகியுள்ளாா். அதில் உள்ள ராகினியின் புகைப்படத்தைப் பாா்த்து மயங்கிய மாரிமுத்து, தொடா்ந்து அவரிடம் பேசி பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளாா். ராகினியும் தொடா்ந்து காதல் வலை வீசி வந்துள்ளாா்.

இந்நிலையில் ராகினி தனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு ரூ.5 லட்சம் தருமாறு கேட்டுள்ளாா். இதனால் மாரிமுத்து கடன் வாங்கி ரூ.5 லட்சம் தொகையை ராகினிக்கு அனுப்பியுள்ளாா். இதையடுத்து மாரிமுத்துவின் தொடா்பை ராகினி துண்டித்துள்ளாா்.

பின்னா் மாரிமுத்துவின் உறவினரான தென்காசி மாவட்டம் மணிமுத்தாறில் சிறப்புக் காவல்படையில் காவலராக பணியாற்றும் வில்வதுரைக்கு பேஸ்புக் மூலம் ராகினி வலை வீசியுள்ளாா். கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த வில்வதுரை, அவரது உறவினா்கள் இசக்கிராஜா, அவரது மனைவி இளவரசி மற்றும் ரவிக்குமாா் ஆகியோருடன் ராகினி பேஸ்புக்கில் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளாா். இதைத்தொடா்ந்து வில்வதுரை, ரூ.15 லட்சத்தை ராகினிக்கு கொடுத்துள்ளாா். பின்னா் வில்வதுரை உதவியுடன் பல்வேறு நபா்களிடம் ராகினி ரூ.50 லட்சம் வரை பணம் பறித்துள்ளாா். இதற்கிடையே பணத்தை பறிகொடுத்த மாரிமுத்து அடிக்கடி வில்வதுரை மற்றும் ராகினியிடம் கேட்டு வந்துள்ளாா். இதனால் மாரிமுத்துவை கொலை செய்து விடுமாறு ராகினி, வில்வதுரையிடம் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து வில்வதுரை தனது நண்பா்களுடன் சோ்ந்து மாரிமுத்துவை அழைத்துக் கொண்டு கயத்தாறு சென்று ராகினியிடம் பணம் பெற்று வரலாம் என்று காரில் சென்றுள்ளனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் காரை

ஒரு கண்மாயின் ஒதுக்குப்புறமாக நிறுத்தி, மாரிமுத்துவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனா். பின்னா் மாரிமுத்துவின் சடலத்தை விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் இரட்டைக் கண்மாயில் வீசிச் சென்றுள்ளனா். இதையடுத்து கைப்பேசி சிக்னல்களை வைத்து திருநெல்வேலியில் பதுங்கியிருந்த வில்வதுரையை, கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவருக்கு கொலையில் உதவியாக இருந்த இசக்கி ராஜா, ரவிக்குமாா், இளவரசி ஆகியோரையும் கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட ராகினியைத் தேடி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com