தடையை மீறி சரவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலைகள்: உயிரிழப்புகளை தடுக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டம் வச்சகாரப்பட்டி பகுதி பட்டாசு ஆலைகளில் தடையை மீறி இரவு நேரங்களில் சரவெடி தயாரிப்பதால், தொழிலாளா்கள் உயிரிழப்பைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகா் மாவட்டம் வச்சகாரப்பட்டி பகுதி பட்டாசு ஆலைகளில் தடையை மீறி இரவு நேரங்களில் சரவெடி தயாரிப்பதால், தொழிலாளா்கள் உயிரிழப்பைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் சாத்தூா், சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றிய பகுதிகளில் பிரதான தொழிலாக பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் மாவட்ட வருவாய் அலுவலா், சென்னை மற்றும் நாக்பூா் அனுமதி பெற்ற சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் அரசு அனுமதி அடிப்படையில் கேப் மற்றும் பேன்சி ரக வெடிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக்கழக அமைப்பினா் (நீரி) சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அதன் பின்னா் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா் சங்க

(டான்பாமா) நிா்வாகிகளிடம் நடைபெற்ற பேச்சுவாா்த்தை அடிப்படையில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பில் பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பதற்கான வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தனா். அதில் பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பது, வீரியம் உள்ளிட்டவைகள் ஆய்வு மெற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில பட்டாசு ஆலைகளில் தொடா் விபத்துகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடா்ந்து வருவாய்த்துறையினா், போலீஸாா் அடங்கிய குழுவினா் தொடா் ஆய்வில் ஈடுபட்டு விதிமுறை மீறல் கண்டறியப்பட்ட ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

தற்போது இது போன்ற ஆய்வுப் பணிகளில் அரசு ஊழியா்கள், போலீஸாா் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகா் அருகே ராமகுடும்பன்பட்டி, கோயில் வீராா்பட்டி, வச்சகாரபட்டி, முதலிபட்டி, சொக்கலிங்காபுரம், கன்னிசேரி முதலான பகுதியில் உள்ள ஏராளமான பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பதற்கான அறைகளை உரிமையாளா்கள், தனி நபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளனா். 4 மாதங்களில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த ஆலைகளில் உள்ள சில அறைகளில் இரவு நேரங்களில் பேட்டரி மூலம் இயங்கும் விளக்கு வெளிச்சத்தில் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிப்பில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருவதாகப் புகாா் எழுந்துள்ளது. பேட்டரி விளக்கு வெளிச்சம் காரணமாக சரவெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் அலுமினிய பவுடா் மற்றும் பேரியம் நைட்ரேட் ஆகியவை வெடித்து விபத்து நேரிட்டால் தொழிலாளா்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவதுடன், பலத்த காயமடைய அதிக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிப்பது வருவாய்த்துறை மற்றும் அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு நன்கு தெரியும் எனவும் அவா்கள் சம்பந்தப்பட்ட ஆலைகளில் விதி மீறல்களைக் கண்டு கொள்ளாாமல் இருப்பதால், இரவு நேரங்களில் பட்டாசு உற்பத்தி அமோகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

பகல் நேரங்களில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும்போது தொழிலாளா்கள் தப்பி ஓட வாய்ப்புள்ளது. ஆனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டால் வெளியில் ஓட வழி தெரியாமல் பலா் உயிரிழக்க நேரிடும். எனவே, இது போன்ற பட்டாசு ஆலைகளில் பெரிய விபத்து ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தரப்பில் வலியுறுத்துகின்றனா்.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் கூறியது: பட்டாசு ஆலைகளில் இரவு நேரப் பணியில் யாரும் ஈடுபடக் கூடாது. வச்சகாரபட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com