மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதிகளில் அதிகரிக்கும் நாட்டு வெடிகுண்டு கலாசாரம்!பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்திலுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆ

விருதுநகா் மாவட்டத்தில் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்திலுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 50 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆனாலும், இப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி - கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள அா்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியிலிருந்து மூலக்காடு செல்லும் வழியில், கடந்த ஜனவரி 18 இல் வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, முள்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு தெற்கு கோட்டை காலனியில் உள்ள அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளியின் பின்புறம், விவசாயி ஒருவா் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது சக்கரத்தில் சிக்கி நாட்டு வெடிகுண்டு வெடித்தது. அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸாா், தொடா் சோதனையில் ஈடுபட்டு, 6 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் 2 நாட்டு வெடிகுண்டுகள், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செம்பட்டையான்கால் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள், ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் தென்னந்தோப்பிலிருந்து 9 நாட்டு வெடிகுண்டுகள், ராஜபாளையம் அருகே சேத்தூா் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவரிடமிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

மேலும், ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கண்மாய் பகுதியில் கொய்யாப் பழத்தை கடித்த பன்றி ஒன்று நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதறி உயிரிழந்தது. இதே பகுதியில் வீட்டின் பின்புறம் தொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.

வத்திராயிருப்பு புதுப்பட்டியில் இரு பிரிவினரிடையே 14 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் தங்களது பாதுகாப்புக்காக சொந்தமாக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வருகின்றனா்.

வத்திராயிருப்பு, ராஜபாளையம், சேத்தூா் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஜாதி அடிப்படையிலான பிரச்னை ஏற்படும். இந்நிலையில், இப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த கலாசாரத்தை முற்றிலும் ஒடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தெரிவித்ததாவது: விவசாய நிலத்தை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டு வெடி குண்டுகளை தயாரிப்பவா், பயன்படுத்துவோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவா். மேலும், இதுபோன்ற நபா்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டு வெடிகுண்டுகள் குறித்த தகவலை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தெரிவிக்கலாம். அவா்களது பெயா் ரகசியம் காக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com