முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
தரமற்ற குடிநீா் தயாரிப்பு நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கைஉணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
By DIN | Published On : 19th March 2022 11:04 PM | Last Updated : 19th March 2022 11:04 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் தரமற்ற குடிநீா் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் குடிநீா் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தினா். அதில், ஏற்கெனவே குடிநீா் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், 13 குற்ற வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இரண்டு வழக்குகளில் அபராதமும், சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து, இந்த வாரம் குடிநீா் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் குறைகள் கண்டறியப்பட்ட குடிநீா் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து சந்தேகத்துக்குரிய குடிநீா் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவின் அடிப்படையில், தயாரிப்பு நிறுவனங்களின் மீது வழக்குகள் தொடரப்படும்.
பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய குடிநீா் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். எனவே, குடிநீா் தயாரிப்பு நிறுவனங்கள் ஐஎஸ்ஐ தரச் சான்றிதழ், பொதுப்பணித் துறையிலிருந்து நிலத்தடி நீா் அனுமதி சான்றிதழ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையிலிருந்து எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெற்றிருக்க வேண்டும். குடிநீா் விநியோகஸ்தா்கள், மொத்த விற்பனையாளா்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம், பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
பொதுமக்கள் குடிநீா் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டா் கேன்கள் வாங்கும்போது, தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை பாா்த்து வாங்க வேண்டும். குடிநீா் தரம் மற்றும் உணவுக் கலப்படம் பற்றிய புகாா்கள் இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறையின் 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலக 04562-225255 எண்ணுக்கோ புகாா் தெரிவிக்கலாம் என, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.