நீதிமன்றத்துக்கு வந்தபோது துப்பாக்கியை தனி நபரிடம் வழங்கிய 2 காவலா்கள் தற்காலிகப் பணி நீக்கம்

விருதுநகா் நீதிமன்றத்திற்கு கைதியை விசாரணைக்காக அழைத்து வந்தபோது, துப்பாக்கியை தனி நபரிடம் வழங்கிய 2 காவலா்கள் வியாழக்கிழமை தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

விருதுநகா்: விருதுநகா் நீதிமன்றத்திற்கு கைதியை விசாரணைக்காக அழைத்து வந்தபோது, துப்பாக்கியை தனி நபரிடம் வழங்கிய 2 காவலா்கள் வியாழக்கிழமை தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள நாருகாபுரத்தைச் சோ்ந்த ஜான்பாண்டியன்- முருகலெட்சுமி ஆகியோா் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாா் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மூன்று மாத கா்ப்பிணியான முருகலெட்சுமி கடந்த மாதம் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக அப்பெண்ணின் உறவினா்கள், ஜான்பாண்டியன் குடும்பத்தினா் கொலை செய்ததாக புகாா் தெரிவித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து ஜான்பாண்டியனை இருக்கன்குடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான்பாண்டியனை இருக்கன்குடி போலீஸாா், விருதுநகா் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனா். அப்போது பாதுகாப்பிற்காக வந்த இருக்கன்குடி காவலா்கள் அன்பரசன், ஆறுமுகவேல் ஆகியோா் கழிப்பறைக்குச் செல்வதற்காக துப்பாக்கிகளை, நீதிமன்றம் எதிரே கடையில் அமா்ந்திருந்த இருக்கன்குடியைச் சோ்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞரணிச் செயலா் மாடேஸ்வரன் (30) என்பவரிடம் கொடுத்துச்சென்றுள்ளனா். அவா், அந்த துப்பாக்கிகளை சுய படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளாா். இத்தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா், சம்பந்தப்பட்ட காவலா்கள் அன்பரசன், ஆறுமுகவேல் ஆகியோரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com