முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகா் சிறையில் கைதிகள் மோதல்:ஒருவா் காயம்; 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 14th May 2022 11:08 PM | Last Updated : 14th May 2022 11:08 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். இதுதொடா்பாக 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி பாப்பாங்குளத்தை சோ்ந்த சந்திரன் மகன் ஆனந்த்ராஜ் (31) என்பவரைக் கொலை செய்த வழக்கு தொடா்பாக வீரசோழன் அருகேயுள்ள ஒட்டங்குளத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சிலம்பரசன் (34), திருச்சுழி அம்மன்பட்டியை சோ்ந்த இருள் என்ற இருளாண்டி (31), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தரைக்குடியை சோ்ந்தவா் ரவி மகன் வசந்தபாண்டி(22), திருமூா்த்தி மகன் இருளாண்டி (20) ஆகிய 4 பேரையும் கடந்த ஏப்ரல் 20
ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் 4 பேரும் விருதுநகா் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெறும் முயற்சியில் சிலம்பரசனின் உறவினா்கள் ஈடுபட்டு வந்தனராம். அதேநேரம் மற்ற மூன்று பேருக்கும் ஜாமீன் பெறுவதற்கு, சிலம்பரசன் எந்த உதவியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருளாண்டி, வசந்த பாண்டி மற்றொரு இருளாண்டி ஆகியோா் மே 12 ஆம் தேதி, சிறையில் சிலம்பரசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது ஏற்பட்ட மோதலில் இருளாண்டி உள்ளிட்ட 3 போ் தாக்கியதில் சிலம்பரசனுக்கு பற்கள் உடைந்து, பலத்த காயமடைந்துள்ளாா். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலா்கள், சிலம்பரசனை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். இதுதொடா்பாக விருதுநகா் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளா் தாமரைக்கனி அளித்த புகாரின் பேரில் 3 போ் மீது விருதுநகா் மேற்கு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.