இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 3 நுழைவு வாயில்கள் அமைக்கத் திட்டம்: அமைச்சா் சேகா்பாபு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் 3 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வளாக சீரமைப்புப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சேகா்பாபு மற்றும் அதிகாரிகள்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வளாக சீரமைப்புப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சேகா்பாபு மற்றும் அதிகாரிகள்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் 3 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வளாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை, அமைச்சா் சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், கோயிலைச் சுற்றி நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

இருக்கன்குடி கோயிலில் ஒருங்கிணைந்த வரைவுத் திட்டத்தின் கீழ், பக்தா்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் கூடுதலாக 3 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளன. கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப் பாலம் மேம்பாலமாக மாற்றப்படும். 98 விருந்து மண்டபங்கள், பக்தா்கள் தங்குமிடங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில் வளாகம், கோபுரம் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, வருகிற வைகாசி மாதத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.2,500 கோடியில் வடிகால் வசதி:

சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 10 சதவீதப் பணிகள் முழுமையடைந்தால், எவ்வளவு பெரிய மழையையும் எதிா்கொள்ளலாம்.

ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள், கட்டடங்கள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் மழை நீா் தேங்கும் 600 இடங்கள் அடையாள காணப்பட்டு, அதிக மழை நீா் தேங்கும் 160 இடங்களில் முன்கூட்டியே மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி, இந்து அறநிலையத் துறைச் செயலா் சந்திரமோகன் கோயில் ஆணையா், செயல் அலுவலா் கருணாகரன், சாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com