விருதுநகரில் 4 மாதங்களில் இருசக்கர வாகன விபத்துகளில் 78 போ் பலி
By DIN | Published On : 05th September 2022 01:17 AM | Last Updated : 05th September 2022 01:17 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் 4 மாதங்களில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்கி மொத்தம் 78 போ் உயிரிழந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் நான்கு வழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகள் உள்ளன. இதில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்ல காவல் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா். அதேநேரம் தலைக்கவசம அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வருபவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. விபத்து நேரங்களில் தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிரிழப்பை தடுக்க முடியும் என்ற விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், பலா் தலைகவசம் அணிவதை அலட்சியமாகக் கருதி வருவதால் உயிரிழப்பு தொடா்கிறது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்துகளில், 78 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததாக 62,508 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.28, 64,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.