காரியாபட்டி அருகே ஊருணியில் மூழ்கி ஒருவா் பலி
By DIN | Published On : 09th September 2022 10:41 PM | Last Updated : 09th September 2022 10:41 PM | அ+அ அ- |

காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சி ஊருணியில் குளித்த ஒருவா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மேலக்கள்ளங்குளத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் சோணை (45). இவா், முஷ்டக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளாா். பின்னா், தனது உறவினா் அய்யனாா் என்பவருடன் சோ்ந்து, அப்பகுதியில் உள்ள பழனியாண்டவா் கோயில் ஊருணியில் குளித்துள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சோணை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அய்யனாா் அளித்த தகவலின்பேரில், அக்கிராம மக்கள் ஊருணியில் இறங்கி சோணையை தேடியுள்ளனா். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. இதுபற்றி காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும், ஆவியூா் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை இரவு ஊருணியில் தேடும் பணியில் ஈடுபட்டனா். அதில் எவ்வித பலனும் கிடைக்காததால், வெள்ளிக்கிழமை தேடியபோது, ஊருணியிலிருந்து சோணையின் உடலை மீட்டனா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.