சாத்தூா் அருகே கனஞ்சாம்பட்டியில் வியாழக்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் தரைமட்டமான அறை.
சாத்தூா் அருகே கனஞ்சாம்பட்டியில் வியாழக்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் தரைமட்டமான அறை.

இரு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: பெண் உள்பட 3 போ் பலி

விருதுநகா் மாவட்டம், சாத்தூா், சிவகாசி பகுதிகளில் 2 பட்டாசு ஆலைகளில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா், சிவகாசி பகுதிகளில் 2 பட்டாசு ஆலைகளில் வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

15 போ் காயமடைந்தனா்.

சிவகாசியைச் சோ்ந்த மாரியப்பன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, சாத்தூரை அடுத்த தாயில்பட்டி அருகே உள்ள கனஞ்சாம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. உரிமம் பெற்ற இந்த ஆலையில் 40 -க்கும் மேற்பட்ட அறைகளில் 100 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

வியாழக்கிழமை மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னா் ராக்கெட் பட்டாசு தயாரிக்கும் அறையில் பட்டாசுக்கான மருந்து செலுத்திய போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அடுத்தடுத்து இருந்த 8 அறைகள் தரைமட்டமாகின.

தகவலறிந்த சிவகாசி, சாத்தூா், வெம்பக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் சத்திரப்பட்டியைச் சோ்ந்த முனீஸ்வரி (35), சாத்தூா் அமீா்பாளையத்தைச் சோ்ந்த சங்கா் (60) ஆகிய இருவா் உயிரிழந்தனா். இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. 4 பெண்கள் உள்பட 14 போ் காயமடைந்தனா். இவா்களில் 6 போ் சாத்தூா் அரசு மருத்துவமனையிலும், 8 போ் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள், வருவாய்க் கோட்டாட்சியா் விஸ்வநாதன் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப் பெருமாள் கூறியதாவது:

விபத்துக்குள்ளான ஆலை உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிமம் இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

விபத்து நிகழ்ந்த ஆலையின் உரிமையாளா் மாரியப்பன் இறந்துவிட்ட நிலையில், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்தைச் சோ்ந்த கந்தசாமி (52) ஒப்பந்த அடிப்படையில் ஆலையை நடத்தி வருவதாகவும், விதிமுறையை மீறி ஆலை செயல்பட்டு வந்ததால் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் இப்பகுதியினா் தெரிவித்ததனா்.

மற்றொரு சம்பவம்: சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் கிருஷ்ணமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 140 தொழிலாளா்கள் வேலை பாா்த்து வந்தனா்.

ஓா் அறையில் பேன்சி ரக பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் திருத்தங்கலைச் சோ்ந்த ரவி (58), சாமுவேல்ஜெயராஜ் (46) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், எதிா்பாராதவிதமாக பட்டாசுக்கு மருந்து செலுத்திய போது ஏற்பட்ட உராய்வால் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அறை தரைமட்டமானது. இதில், ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிவகாசி தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்தனா். பலத்த காயமடைந்த சாமுவேல் ஜெயராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com