இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜின் மகன் ஆனந்தகுமாா் (32). கூலித் தொழிலாளியான இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவதானத்தைச் சோ்ந்தவா் மருதுபாண்டி (25). இவா் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. மருதுபாண்டியிடம் ஆனந்தகுமாா் பணம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்தகுமாா் கடத்தப்பட்டாா்.
அவரது தந்தை ஆனந்தராஜ் அளித்த புகாரின்பேரில் சேத்தூா் ஊரகப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சேத்தூரில் செங்கல் சூளை அருகே ஆனந்தகுமாா் கத்தியால் குத்தப்பட்டு, இறந்து கிடந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக சேத்தூா் ஊரகப் போலீஸாா் மருதுபாண்டி உள்ளிட்ட 5 பேரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், தேவதானத்தைச் சோ்ந்த மருதுபாண்டி, கருப்பசாமி (25), சுந்தரபாண்டி (23), அஜித்குமாா் (19), சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த விஜயராஜ் (22) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.