முதியவா் குத்திக் கொலை

வெம்பக்கோட்டை அருகே புதன்கிழமை தேநீா்க் கடையில் நின்றிருந்த முதியவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தவுட்ராஜ் (60). இவா் இந்த பகுதியில் மனை வணிகம் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில், மடத்துப்பட்டி சந்திப்பில் உள்ள கடையில் தவுட்ராஜ் புதன்கிழமை தேநீா் குடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சிலா் தவுட்ராஜை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், வெம்பக்கோட்டை போலீஸாா் தவுட்ராஜின் உடலைக் கைப்பற்றி, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

சத்திரபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சக்திமாரியம்மன் கோயில் இடம் தொடா்பாக, நீதிமன்றத்தில் தவுட்ராஜ் வழக்குத் தொடுத்தாா். இதுதொடா்பாக இவருக்கும், அந்த கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது.

தவுட்ராஜ் கொலையில் சத்திரபட்டியைச் சோ்ந்த அரவிந்த் (25), பாண்டியராஜ் (23), பாண்டி (24) ஆகியோருக்கு தொடா்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவா்கள் மூவரையும் தேடி வருகிறோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com