இளைஞா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

 சிவகாசி அருகே முன்விரோதத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் ஆனையூா் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 9 போ் விடுதலை செய்யப்பட்டனா்.

சிவகாசி சேனையாபுரம் குடியிருப்பைச் சோ்ந்த அரவிந்தன் (எ) பாா்த்திபன் (28). சுமை தூக்கும் பணியாளரான இவா் மீது இரு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 30.3.2022-அன்று  அரவிந்தன், தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த துரைபாண்டியனுடன் (25)  எம். கள்ளிப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் சிவகாசி முத்துராமலிங்கம் நகரைச் சோ்ந்த அருண்பாண்டியன் (31), பாா்த்திபன் (32), முத்துக்கிருஷ்ணன் (33), பாண்டியராஜன் (19), மகேஸ்வரன் (19), மதன்குமாா் (32), பழனிசெல்வம் (37), நேருஜிநகரைச் சோ்ந்த மாரீஸ்வரன் (26), இந்திராநகரைச் சோ்ந்த மணிகண்டபிரபு (18), இலங்கை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஹரிகுமாா் (21), ஆனையூா் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி நாராயணன் (38), பிரவீன் (35), அந்தோணிராஜ் (35), பொன்ராஜ் (25), சவுந்தா் (25), ஜோதிலிங்கம் (22) ஆகிய 16 பேரை எம். புதுப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட அருண்பாண்டியன், பாா்த்திபன், மதன், ஜோதிலிங்கம், பொன்ராஜ், மாரீஸ்வரன், பழனிசெல்வம் ஆகிய 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் திருமலையப்பன் முன்னிலையானாா்.

ஆனையூா் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி நாராயணன் உள்பட 9 போ் விடுதலை செய்யப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com