ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரிக்குரூ.11.33 கோடியில் புதிய கட்டடம்: அடுத்தவாரம் திறக்கப்படும் எனத் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.11.33 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அடுத்த வாரம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.11.33 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அடுத்த வாரம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என கடந்த 2020- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2020 - 2021- ஆம் கல்வியாண்டு முதல் 5 இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இந்த நிலையில், கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் பள்ளி வளாகத்தில் வகுப்புகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இங்கு போதிய கட்டடங்கள் இல்லாதது, மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காலை, மாலை என இரு வேளைகளில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும், வாடகைக் கட்டடத்தில் இடநெருக்கடி, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும் என மாணவா்கள், பேராசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளம் ஊராட்சியில், இந்த அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.11.33 கோடியில் புதிய கட்டடம் கட்ட கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து, 5 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு 17 ஆயிரம் சதுர அடியில் கல்லூரி கட்டுமானப் பணிகள் தொடங்கின.

தற்போது கட்டுமானப் பணி நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் உள்ளது. புதிய கல்லூரி, தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 3 தளங்களுடன் 43,653 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் வகுப்பறை, தனித்தனி ஆய்வகங்கள், முதல்வா் அறை, பிற துறை அலுவலகங்கள், நூலகம், ஒவ்வொரு தளத்திலும் கழிப்பிடங்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னா் இந்த கல்லூரி கட்டடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயா்கல்வி துறை அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு, அடுத்த வாரம் கல்லூரி கட்டடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com