ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பழைய கொடி மரங்கள் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் அகற்றப்பட்ட இரு பழைய கொடி மரங்கள் மாயமானதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் அகற்றப்பட்ட இரு பழைய கொடி மரங்கள் மாயமானதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ ஆண்டாள் கோயில் செயல் அலுவலா் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் கடந்த 29-ஆம் தேதி புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கடந்த 2015, 2016-ஆம் ஆண்டுகளில் திருப்பணிகள் நடைபெற்ற போது, ஆண்டாள் சந்நிதி, வடபத்ர சயனா் சந்நிதி, பெரியாழ்வாா் சந்நிதி முன் இருந்த கொடி மரங்கள் அகற்றப்பட்டு, புதிதாக 3 கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

அகற்றப்பட்ட பழைய கொடி மரங்களில் தற்போது ஒன்று மட்டுமே கோயிலில் உள்ளது. மற்ற 2 கொடி மரங்களும் கோயிலில் இருந்து சட்ட விரோதமாக எடுத்து செல்லப்பட்டுள்ளன. அந்த கொடி மரங்களில் பழைமையான செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இரண்டு கொடி மரங்களையும் கோயிலில் பிரசாதக் கடை ஏலம் எடுத்து நடத்தி வரும் ரமேஷ் (எ) ராமா், அவரது சகோதரா் மாரிமுத்து ஆகியோா் லாரி மூலம் எடுத்துச் சென்றதாகத் தெரியவந்தது.

அவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆண்டாள் கோயில் திருமண மண்டபத்தில் மணமேடையில் படிகளின் இருபுறமும் இருந்த கல்லால் ஆன யானை சிலைகள் கடந்த 2008 - 2009-ஆம் ஆண்டு காலத்தில் சட்ட விரோதமாக அகற்றப்பட்டன. இது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதுகுறித்து கடந்த சில நாள்களுக்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஆண்டாள் கோயிலில் ஆய்வு செய்து விட்டுச் சென்றனா்.

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற காலங்களில் கோயிலில் பணியாற்றிய செயல் அலுவலா்கள், முன்னாள் ஊழியா்கள், பட்டா்கள், பக்தா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com