ஏழாயிரம் பண்ணையில் சுகாதாரக்கேடு: பொதுமக்கள் புகாா்

சாத்தூா் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ஏழாயிரம்பண்ணை- இ.எல். ரெட்டியபட்டி செல்லும் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்.
ஏழாயிரம்பண்ணை- இ.எல். ரெட்டியபட்டி செல்லும் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்.

சாத்தூா்: சாத்தூா் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் சேரும் குப்பைகள் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மொத்தமாக அள்ளப்பட்டு இ.எல். ரெட்டியபட்டி செல்லும் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இந்த சாலையைக் கடந்து தான் ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துா்நாற்றும் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதன் அருகே வசிக்கும் அருந்ததியினா் குடியிருப்பைச் சோ்ந்தவா்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். இந்தப் பிரச்சனை குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் சாா்பில் பலமுறை புகாா் அளித்தும் பலனில்லை. சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் பலத்த காற்று வீசும் போதும், தீவைத்து எரிக்கப்படும் போதும் இந்த வழியாக வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கிக் கொள்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும் ஏழாயிரம்பண்ணை பிரதான சாலை, பழைய ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைத் தொட்டி இல்லாததால் குடியிருப்பு அருகேயும், சாலையோரத்திலும் குப்பைகளை பொதுமக்கள் கொட்டுகின்றனா்.

எனவே, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தெருக்களில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். மேலும் குப்பைக் கிடங்கு அமைத்து அங்கு குப்பைகளை கொட்ட வேண்டும். அல்லது குப்பைகளை மொத்தமாக கொட்டும் இடத்தில் சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாக அதிகாரிகள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதற்கு தகுந்த மாற்று இடம் இல்லை. சுற்றுச்சுவா் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com