சாத்தூா் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்படும்

மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக சாத்தூா் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்படும் எ
சாத்தூா் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்படும்

மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக சாத்தூா் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்படும் என வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் குருலிங்காபுரத்தில் 15-ஆவது நிதிக் குழு சுகாதாரத் திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 20 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், மேலக்காந்தி நகா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாநில நிதிக் குழு கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 86 லட்சத்தில் புதிய வகுப்பறை, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம், முக்குராந்தலில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.12 கோடியே 60 லட்சத்தில் சாத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட மதுரை - கன்னியாகுமரி சாலையில் கழிவுநீா் கால்வாய், நடைபாதை, ரூ. 2 கோடியில் சாத்தூா்-திருவெங்கடபுரம் சாலையை இருவழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுதல், கரிசல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதியக் கட்டடம் என ரூ.17.06 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். இதையடுத்து, சாத்தூா் நகராட்சியில், அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட நடைபாதையுடன் கூடிய பூங்கா என ரூ.36.55 லட்சத்தில் நிறைவுற்ற பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அமைச்சா் பேசியதாவது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா் இணைப்புகள், சுகாதாரம், உள்புறச் சாலைகள், தெரு மின்விளக்குகள், பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

சாத்தூா் நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்பு சாத்தூா் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்படும். இதனால், தொடா்ந்து 20 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தலைமை வகித்தாா். சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் முன்னிலை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் குருசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி நிா்மலா கடற்கரைராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் கடற்கரைராஜ், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com