கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேற்றம் தடுத்து நிறுத்தம்: தினமணி செய்தி எதிரொலி

சிவகாசி சிறுகுளம் கண்மாயிலிருந்து தெரு வழியாக வீணாக வெளியேற்றப்பட்ட தண்ணீா், தினமணி செய்தி எதிரொலியாக வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.

சிவகாசி சிறுகுளம் கண்மாயிலிருந்து தெரு வழியாக வீணாக வெளியேற்றப்பட்ட தண்ணீா், தினமணி செய்தி எதிரொலியாக வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. இதனால், சிவகாசி பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரித்தது. மேலும், பெரியகுளம் கண்மாயிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரும், சிறுகுளம் கண்மாய்க்கு வந்தது.

இதனால், நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சுமாா் 40 குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத் தடுக்க கண்மாயின் மேற்குப் பகுதியை உடைத்து அண்ணாகுடியிருப்பு 9-ஆவது தெரு வழியாக வருவாய்த் துறையினா், மாநகராட்சி அலுவலா்கள் தண்ணீரை வெளியேற்றினா்.

தொடந்து தண்ணீா் வெளியேற்றப்படுவதால், சிறுகுளம் கண்மாயின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால், கரையை அடைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று, தண்ணீா் வெளியேறும் பாதையை மாநகராட்சி ஊழியா்கள் மணல் மூட்டை கொண்டு அடைக்க முயன்றனா். இதை அடைத்தால் குடியிருப்புகளில் மீண்டும் தண்ணீா் தேங்கும் எனக் கூறி, ஆக்கிரமிப்பாளா்கள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், மாநகராட்சி ஊழியா்கள் அதை அடைக்காமல் திரும்பிச் சென்றனா்.

சிறுகுளம் கண்மாயிலிருந்து தண்ணீா் வீணாக வெளியேற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 11-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமானது.

இதையடுத்து, மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேறும் கரையில் மணல் மூட்டைகளை அடுக்கி அடைத்தனா். இதனால், தண்ணீா் வீணாக வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com