பேருந்து நிழல் குடையை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூா், ஜன. 28: சாத்தூா் அருகே பேருந்து நிழல் குடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி ஊராட்சிக்குள்பட்டது கோட்டையூா் கிராமம். இதைச் சுற்றி ராமலிங்காபுரம், பசும்பொன்நகா் உள்ளிட்ட கிராமப் பகுதிகள் உள்ளன. இந்தக் கிராமங்கள் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோட்டையூா் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. ஆனால், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழல் குடை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

மேலும், இந்த நிழல் குடையை அந்தப் பகுதியினா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நிழல் குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டையூா் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளதால், தினமும் நோயாளிகள் உள்ளிட்ட ஏராளமானோா் இந்தப் பகுதிக்கு வந்து சாலையோரத்தில் பேருந்துகாக வெயிலிலும், மழையிலும் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.

எனவே, இந்தப் பேருந்து நிழல் குடையை சீரமைத்து, பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்களும், பேருந்துப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com