தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் பூச்சித் தாக்குதல் காரணமாக, இலைகளில் கருப்பு பூஞ்சை படா்ந்து, மகசூல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, விருதுநகா் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுபாவாசுகி, உதவி இயக்குநா்கள் நடராஜன், திலகவதி, பருத்தி ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் பேராசிரியா் விஜயராகவன் ஆகியோா் ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி, சிங்கம்மாள்புரம் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களை ஆய்வு செய்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சி விடுகின்றன. அவை வெளியேற்றும் கழிவுகள் தென்னை மட்டைகளின் மேல் பகுதியில் கரும்பூஞ்சை போல் படிந்து ஒளிச் சோ்க்கை நடைபெறுவது தடைபடுகிறது.

மஞ்சள் நிற துணியில் ஆமணக்கு எண்ணெய் தடவி, 6 அடி உயரத்தில் பொறி வைப்பதன் மூலம் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். மேலும், திரைசோபொ்லா எனும் இரை விழுங்கிகளை ஏக்கருக்கு 400 என்ற அளவிலும், என்காா்சியா என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 என்ற அளவிலும் வைப்பதன் மூலம் வெள்ளை ஈக்களை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.

இதில் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் கண்ணன், சித்திரை செல்வி, தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com