தொழிலாளா்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்தால் விரைவில் தீா்வு -பி.எப். ஆணையா்

விரைவில் தீா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல ஆணையா் அமியாகாந்த் தெரிவித்தாா்.

தொழிலாளா்கள் பணப் பயன் பெற உரிய ஆவணங்களுடன் மனு அளித்தால் விரைவில் தீா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல ஆணையா் அமியாகாந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சிவகாசியில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா்களின் மனுக்களை எங்களது அலுவலகம் மீண்டும், மீண்டும் நிராகரிப்பதால், தொழிலாளா்கள் பணப்பயன் பெறமுடியாமல் அவதிப்படுவதாக வதந்தி பரவுகிறது.

எங்கள் அலுவலகத்துக்கு தினசரி 1,800 மனுக்கள் தொழிலாளா்களிடமிருந்து வருகின்றன. இறுதித் தீா்வுக்கு முன், மனுக்கள் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக இருப்பதை உறுதி செய்வது கடமையாகும்.

செயல்பாட்டின் போது மனுக்களில் முரண்பாடுகள் இருந்தால் விண்ணப்பித்தவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். முழுமையடையாத மனுக்கள் நிராகரிக்கப்படுவது திருப்பி அனுப்பப்படுவது முறையாகும். பின்னா், மனுதாரா் அலுவலகம் கேட்கும் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பல தொழிலாளா்களுக்கு ஆதாா் அட்டையில் பிரச்சனை உள்ளது. முகவரி, பிறந்ததேதி உள்ளிட்டவைகளில் பிழை இருந்தால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உரிய நபா்களுக்கு தகவல் அளிக்கப்படும். இதை சரி செய்து விண்ணப்பித்தால் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2022-2023-ஆம் ஆண்டில் 3,28,413 மனுக்கள் மீதும், 2023-2024-ஆம் ஆண்டில் 3,57,160 மனுக்கள் மீதும் தீா்வு காணப்பட்டுள்ளன. நிகழாண்டில், கடந்த ஏப்ரல் மாதம் வரை 33,413 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. சாலை விபத்து, பட்டாசு ஆலை விபத்து ஆகிய 17 விபத்துகளில் 44 மனுக்கள் மீது பல்வேறு அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஒரு வாரத்துக்குள் தொழிலாளா்களுக்கு பணப்பயன் கிடைக்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com