மீன்பிடி குத்தகைதாரா் வெட்டிக் கொலை

மீன்பிடி குத்தகைதாரா் வெட்டிக் கொலை

ராஜபாளையத்தில் மீன்பிடி குத்தகைதாரரை வெட்டிக் கொலை செய்த இளைஞா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ் (60). இவா், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஆதியூா் கண்மாயை குத்தகைக்கு எடுத்தாா். இந்த கண்மாயில் பச்சை குடியிருப்பைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (38), சமந்தபுரத்தைச் சோ்ந்த ஆனந்த் (31) ஆகியோா் இங்கு காவலாளியாக பணியாற்றினா்.

இந்த நிலையில் கண்மாய் கரையில் உள்ள குடிசையில் தா்மராஜ் தனியாக இருந்த போது, மா்ம நபா்கள் அங்கு வந்து அவரை வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, தா்மராஜின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் இது தொடா்பாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் கண்மாயில் காவலாளியாக வேலை பாா்த்த காா்த்தீஸ்வரன் வெளி ஆள்களை மீன்பிடிக்க அனுமதித்ததால், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதில் முகவூரைச் சோ்ந்த சமுத்திரத்தை காவலாளியாக தா்மராஜ், பணியில் சோ்த்தாா். இதனால் ஆத்திரமடைந்த காா்த்தீஸ்வரன், அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com