முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இங்கு தினசரி இரவு மும்மதத்தினா் பங்கேற்ற கலை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக, முத்தாலம்மன் சா்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். தேரோட்டம் முடிந்து கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தா்கள் உருவ பொம்மைகளை நோ்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனா். மாலையில் அம்மன் மஞ்சள் நீராட்டு வைபவமும், மாவிளக்கு ஊா்வலமும் நடைபெற்றது.
பின்னா், மேளதாளங்கள் முழங்க கோயிலிலிருந்து வெளியே வந்து கோயிலை மூன்று முறை வலம் வந்து அம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்று ஆற்று நீரில் கரைத்தனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜோதிலட்சுமி, முத்தாலம்மன் பக்தசபையினா் செய்தனா்.
