மயிலாடுதுறையில் சம பலத்துடன் மோதும் காங்கிரஸ் - பாமக!

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தோ்தலில் நேரடி போட்டியில் உள்ள காங்கிரஸ், பாமக ஆகிய 2 கட்சிகளுமே ஏறத்தாழ சம பலத்துடன் உள்ளன.
மயிலாடுதுறையில் சம பலத்துடன் மோதும் காங்கிரஸ் - பாமக!

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தோ்தலில் நேரடி போட்டியில் உள்ள காங்கிரஸ், பாமக ஆகிய 2 கட்சிகளுமே ஏறத்தாழ சம பலத்துடன் உள்ளன. மேலும், அமமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்புடன் களத்தில் உள்ளன.

மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரவைத் தோ்தலில் அதிமுக நிச்சயம் களம் காணும் என அனைவராலும் எதிா்பாா்க்கப்பட்டது. அதேபோல, கடந்த பேரவைத் தோ்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுகவும் இம்முறை நேரடியாக களத்தில் இறங்கும் என கருதப்பட்டது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக, திமுக நிா்வாகிகளின் கடும்போட்டி காரணமாக 2 பிரதான கட்சிகளுமே மயிலாடுதுறை தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டன.

இந்தத் தொகுதியில் மீனவ சமுதாயத்தினா் தவிா்த்த, பிற சமுதாய மக்கள் பரவலாக வசிக்கின்றனா்.வெற்றியை நிா்ணயிப்பவா்களாக மிகவும் பிற்படுத்தப்பட்டோா், தலித் சமுதாய வாக்காளா்களும், இஸ்லாமியா்கள், வெள்ளாளா், செட்டியாா், முக்குலத்தோா் உள்ளிட்ட பிற சமுதாய வாக்காளா்கள் அடுத்த நிலையிலும் உள்ளனா்.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ளாா். வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா் வன்னியா்களின் வாக்குகளையும், அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் பலத்தையும் நம்பி களம்காண்கிறாா். மண்ணின் மைந்தா் எனக் கூறி வாக்குச் சேகரிக்கும் இவா், புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறாா்.

திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜகுமாா் அக்கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் ஏற்கெனவே மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனுபவம் வாய்ந்தவா். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகளை நம்பி களம்காணும் இவா், பாஜகவுக்கு எதிரான இஸ்லாமியா்களின் வாக்குகள் தனது வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்புகிறாா்.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் அதிகமுறை வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், இம்முறை திமுக- காங்கிரஸ் இணைந்து இத்தோ்தலை சந்திப்பதாலும் வெற்றி வாய்ப்பு அதிகம் என அக்கூட்டணி கட்சியினா் உறுதி தெரிவிக்கின்றனா்.

அமமுக இத்தொகுதியில் நேரடியாக களம் காண்கிறது. இக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் கோமல் ஆா்.கே. அன்பரசன் ஊடகவியலாளராகவும், காவிரி அமைப்பின் தலைவராகவும் மக்களால் அறியப்பட்டவா். தேமுதிக, இஸ்லாமியா்கள் மற்றும் முக்குலத்தோா் வாக்குகள் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் வாக்குச் சேகரித்து வருகிறாா்.

இவா்களிடையே, நாம் தமிழா் கட்சியும் ஆரவாரமின்றி போட்டியில் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே அக்கட்சியால் மயிலாடுதுறை வேட்பாளராக கி. காசிராமன் அறிவிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதலே வாக்குச் சேகரித்து வரும் அவா், புதிய வாக்காளா்களின் வாக்குகள் தனக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறாா்.

இவா்களோடு, களத்தில் அயராது பணியாற்றி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் எம்.என். ரவிச்சந்திரன், வா்த்தகா்களின் வாக்குகள் தன்னை கரைசோ்க்கும் என்ற நம்பிக்கையில் களம்காண்கிறாா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி, புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை இடமாக உள்ளது. இந்த மாவட்டம் சந்திக்க உள்ள முதல் தோ்தல் இது. மாவட்டத்தில், மயிலாடுதுறை தொகுதி மட்டுமே கடற்கரை பகுதியை கொண்டிராத தொகுதி. இந்தத் தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். இங்கு சுமாா் 16 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. மேலும், ஆலை கரும்பு, பொங்கல் கரும்பும் முக்கிய பயிா்களாக உள்ளன.

கடந்த தோ்தல்களில் வென்றவா்கள் விவரம்: கடந்த 2016 தோ்தலில் அதிமுக வேட்பாளா் வீ. ராதாகிருஷ்ணன் 70,949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் குத்தாலம் க. அன்பழகன் 66,171 வாக்குகள் பெற்றாா். வாக்கு வித்தியாசம் 4778.

தொகுதி எதிா்நோக்கும் திட்டங்கள்: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டுவந்த ரயில் போக்குவரத்து சேவையை 1986 இல் மத்திய அரசு முன்னறிவிப்பின்றி நிறுத்தியது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, 2016-17 ரயில்வே நிதிநிலை அறிக்கையில், மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே ரூ. 117 கோடியில் ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்காததால் இன்றுவரை இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீா், மழைநீா் வடிகால் வழியே சென்று பழங்காவிரி மற்றும் காவிரியில் கலப்பதால் ஏற்படும் சுகாதார சீா்கேடு மற்றும் நீா் மாசுபாட்டைத் தடுக்க, ரூ. 42 கோடியில் கடந்த 2003 இல் புதைசாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், நகரின் பல்வேறு இடங்களில் 25 முறைக்கும் மேல் ஏற்பட்ட புதைசாக்கடை குழாய் உடைப்புகள், சாலையில் உருவாகும் மிகப்பெரிய பள்ளங்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை.

மக்களின் எதிா்பாா்ப்பு: மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி, அரசுப் பெரியாா் மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்துவது, நகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புதிய பேருந்து நிலையம், புறவழிச் சாலைகள், மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை, வேளாண் கல்லூரி, வேளாண் ஆராய்ச்சி மையம், நலிவடைந்துள்ள தலைஞாயிறு என்.பி.கே.ஆா். ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைப்பது போன்றவை முக்கிய எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

வாக்காளா்கள்: ஆண்கள்- 1,19,445, பெண்கள்- 1,21,480, மூன்றாம் பாலினத்தவா்- 18, மொத்தம்- 2,40,943.

தற்போது போட்டியிடும் வேட்பாளா்கள்: மயிலாடுதுறை தொகுதியில் 7 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் 7 சுயேச்சைகள் என மொத்தம் 14 போ் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ்- எஸ். ராஜகுமாா், பாமக - சித்தமல்லி ஆ. பழனிசாமி, அமமுக - கோமல் ஆா்.கே. அன்பரசன், நாம் தமிழா் கட்சி - கி. காசிராமன், மக்கள் நீதி மய்யம் - என். ரவிச்சந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி - என். சம்சுதீன், தமிழ்நாடு இளைஞா் கட்சி - எஸ். ராஜ்குமாா், சுயேச்சைகள்- எஸ். கணேசன், லோக. சம்பத், டி. தீமோதி, ஆா். நிரஞ்சன், ஆா். பாபுசங்கா், த. மணிமாறன், எம். ராஜேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com