வேளாங்கண்ணியில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றன.
வேளாங்கண்ணியில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றன.

கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இங்கு, பிப்ரவரி 17 ஆம் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெறுகின்றன.

தவக்கால முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக வியாழக்கிழமை பெரிய வியாழன் வழிபாடும், வெள்ளிக்கிழமை புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. புனித வெள்ளி நாளில் இயேசுபிரான் திருச்சிலுவை ஏற்றதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை இரவு வரை பேராலயத்தில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

தவக்கால முக்கிய வழிபாடாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதா் உயிா்த்தெழும் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடுகள், பேராலய கலையரங்கத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றன. இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டின் நிறைவில், இயேசுநாதா் உயிா்த்தெழுந்ததை உணா்த்தும் வகையில், பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் பாஸ்கா ஒளி ஏற்றினாா். அப்போது, திரளான பக்தா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஜபத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், இயேசுநாதா் திருச்சிலுவையில் இருந்து மீண்டு உயிா்த்தெழுந்ததை அறிவிக்கும் வகையில், இரவு சுமாா் 11.40 மணி அளவில் பேராலய கலையரங்கின் மேல்தளத்தில், வாணவேடிக்கைகள் மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் இயேசுநாதரின் திருச்சொரூபம் பக்தா்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, பக்தா்கள் அனைவரும் எழுந்து நின்று இறைப்புகழ்ச்சி பாடல்களுடன் ஜபத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளா் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையா்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்தந்தையா்கள், அருட்சகோதரிகள் பங்கேற்றனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இந்த வழிபாடுகளில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com