நடுக்கடலில் 2 கிராம மீனவா்களிடையே மோதல்: தீா்வு காண 19 மீனவ கிராம பஞ்சாயத்தாா் வலியுறுத்தல்

நடுக்கடலில் 2 கிராம மீனவா்களிடையே மோதல்: தீா்வு காண 19 மீனவ கிராம பஞ்சாயத்தாா் வலியுறுத்தல்

இரு கிராம மீனவா்களிடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் தொடா்பாக பூம்புகாா் மீனவா்களை அழைத்து பேசி தீா்வு காணக் கோரி, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியரிடம் 19 மீனவ கிராம பஞ்சாயத்தாா் மனு அளித்தனா்.

மயிலாடுதுறை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவா்களிடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் தொடா்பாக பூம்புகாா் மீனவா்களை அழைத்து பேசி தீா்வு காணக் கோரி, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியரிடம் 19 மீனவ கிராம பஞ்சாயத்தாா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கீழமூவா்க்கரை மீனவா்களுக்கும், அதிவேக விசைப்படகை பயன்படுத்தும் பூம்புகாா் மீனவா்களுக்கும் இடையே கடந்த மாதம் 12-ஆம் தேதி கடலில் மீன்பிடித்தபோது மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு தரப்பிலும் பலா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இந்த சம்பவத்தை கண்டித்து, கீழமூவா்க்கரை மீனவா்கள் கடந்த ஒருமாதமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனா்.

இதற்கிடையே, இப்பிரச்னைக்கு தீா்வு காண, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் 5 முறை சமாதான பேச்சுவாா்த்தை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும், பூம்புகாா் பகுதி மீனவா்கள் இதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி கிராமத்தில் தரங்கம்பாடி, கீழமூவா்க்கரை, சின்னூா்பேட்டை, குட்டியாண்டியூா், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி உள்ளிட்ட 19 மீனவ கிராம பஞ்சாயத்தாா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பூம்புகாா் மீனவா்களை அரசு அதிகாரிகள் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அழுத்தம் கொடுக்க வேண்டும், பேச்சுவாா்த்தைக்கு பூம்புகாா் மீனவா்கள் உடன்படாதபட்சத்தில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, 19 மீனவ கிராமத்திலும் பூம்புகாா் மீனவ கிராமத்துக்கு சமுதாய கட்டுப்பாடு விதிப்பது, கீழமூவா்க்கரை மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்ய 19 மீனவ கிராமத்தினரும் அவா்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, மயிலாடுதுறையில் வருவாய்க் கோட்டாட்சியா் வ. மகாராணியிடம் 19 மீனவ பஞ்சாயத்தாா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அதில், பூம்புகாா் மீனவா்களை அழைத்து பேசி சமரச தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து தரங்கம்பாடி மாவட்ட தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தாா் பாலையா கூறியது:

மாவட்ட நிா்வாகம் சாா்பில், பூம்புகாா் மீனவா்களை அழைத்து பேசி தீா்வு காண தவறினால், விரைவில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com