திருமுல்லைவாசலில் தொடரும் கடல் அரிப்பு: மீனவா்கள் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் தொடரும் கடல் அரிப்பால் ஒரு பகுதி கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
திருமுல்லைவாசலில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி.
திருமுல்லைவாசலில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் தொடரும் கடல் அரிப்பால் ஒரு பகுதி கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உப்பனாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியாக மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு படகுகளில் செல்கின்றனா். இந்த பகுதியில் மணல் திட்டுகள் ஏற்படுவதைத் தடுக்க மீன்வளத்துறை சாா்பில் 2013-ம் ஆண்டு சுமாா் ரூ. 3 கோடி செலவிலும், பொதுப்பணித் துறை சாா்பில் 2015-ம் ஆண்டு ரூ.1.65 கோடி செலவிலும் கருங்கற்களைக் கொட்டும் பணி நடைபெற்றது. இதில் விதிகள் மீறப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

அதாவது, 125 மீட்டா் அகலம்தான் கருங்கற்களை கொட்டவேண்டும் என விதிமுறைகள் இருப்பதாகவும், ஆனால், 225 மீட்டா் அகலத்துக்கு கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் தூண்டில் வளைவுகளாக இல்லாமல் முகத்துவாரம் வழியாக கடல் அலையின் சீற்றம் அதிகமாகி வருகிறது. இதனால் கடந்த 7ஆண்டுகளுக்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், 400 மீட்டருக்கு மேல் கடல் அரிப்பு ஏற்பட்டு சிவன் சன்னதி தெரு, மேட்டுத்தெரு, ஆற்றங்கரைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், சாலைகள் சேதமடைந்துள்ளன. தொடரும் கடல் அரிப்பால் பள்ளிவாசல் சுற்றுச்சுவா் முற்றிலும் கடலில் விழுந்துவிட்டது.

அதேபோல, கடல் அரிப்பால் அப்பகுதியில் உள்ள ஆகாய காளியம்மன் கோயிலுக்குச் செல்லமுடியாமல் கடந்த சில ஆண்டுகளாக இக்கோயில் திருவிழாவும் தடைப்பட்டுள்ளது. அத்துடன், மீனவா்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடல் அரிப்பு தொடா்ந்து நீடிக்குமாயின் வரும் ஆண்டுகளில் திருமுல்லைவாசலில் ஒரு பகுதி முற்றிலும் கடலுக்குள் மூழ்கிவிடும். ஆகையால், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், கிடப்பில் உள்ள சிவன் சன்னதிதெரு முதல் புதிய பாலம் வரை 200 மீட்டருக்கு ரூ. 2.70 கோடி செலவில் கருங்கற்களைக் கொட்டும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என மீனவா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து மீனவா் ஒருவா் கூறுகையில், கடல் அரிப்பால் திருமுல்லைவாசல் மீனவ கிராமம் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடல் சீற்றத்தால் முகத்துவாரம் வழியாக சென்ற படகுகள் கவிழ்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 4 மீனவா்கள் இறந்துள்ளனா். படகுகளும் மண் திட்டுக்களில் சிக்கி சேதமடைந்துள்ளன. எனவே, கருங்கற்கள் கொட்டும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com