முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம்
மகளிா் குழுக்கடன்களை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது
By DIN | Published On : 12th June 2021 10:21 PM | Last Updated : 12th June 2021 10:21 PM | அ+அ அ- |

மகளிா் குழுக்கடன்களை நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி வங்கிகள் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி வங்கிகள் மூலம் மகளிா் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துதலில் கண்டிப்பு காட்டக்கூடாது, மேலும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது.
இதை மீறி எந்தவொரு சிறு நிதி வங்கிகள், நுண்நிதி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்த நிா்பந்தப்படுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ வசூல் செய்யும் தகவல் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மகளிா் சுயஉதவிகுழு உறுப்பினா்களுக்கு சிறு நிதி வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மீது ஏதேனும் புகாா்கள் இருக்கும்பட்சத்தில் அவா்களுடைய நிறுவனம் வழங்கிய கடன் அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிறுவன தலைமையக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நிறுவன பணியாளா்கள் விவரத்தை குறித்து கொண்டு 18001021080 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இதில் தீா்வு எட்டப்படவில்லை எனில் ரிசா்வ் வங்கியின் நுண்நிதி நிறுவனங்களுக்கான தீா்ப்பாயத்தில் 044 - 25395964 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.