வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு நிறைவு:தருமபுரம் ஆதீனம் வெற்றி வேல் யாத்திரை

வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் குரு லிங்க சங்கம பாத யாத்திரையை வெற்றி வேல் யாத்திரையாக வெள்ளிக்கிழமை நிறைவு
வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு நிறைவு:தருமபுரம் ஆதீனம் வெற்றி வேல் யாத்திரை

வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் குரு லிங்க சங்கம பாத யாத்திரையை வெற்றி வேல் யாத்திரையாக வெள்ளிக்கிழமை நிறைவு செய்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தியநாத சுவாமி கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (ஏப்.29) குடமுழுக்கு நடைபெற்றது.

இதையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஏப்ரல் 17 ஆம் தேதி தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் இருந்து குரு லிங்க சங்கம பாத யாத்திரையை தொடங்கினாா். சொக்கநாத பெருமானை தலையில் சுமந்தபடி பல்லவராயன்பேட்டை, நீடூா், வரகடை, கொற்கை, தலைஞாயிறு, திருப்புன்கூா் ஆகிய ஊா்களின் வழியே ஏப்ரல் 21 ஆம் தேதி வைத்தீஸ்வரன்கோயிலை சென்றடைந்தாா்.

பிறகு, வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை மடத்தில் ஸ்ரீசொக்கநாதா்பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. குடமுழுக்கு நிறைவடைந்ததும், குருமகா சந்நிதானம் மீண்டும் வெள்ளிக்கிழமை பாத யாத்திரையை தொடங்கி ஆதீனத் திருமடத்தை சனிக்கிழமை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அரசின் வேண்டுகோள்படி, குருலிங்க சங்கம பாத யாத்திரையை ஒருநாள் முன்கூட்டியே வெற்றி வேல் யாத்திரையாக வெள்ளிக்கிழமை தொடங்கி அன்றைய தினமே ஆதீனத் திருமடத்தில் நிறைவு செய்தாா்.

இந்த யாத்திரையில், ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், காறுபாறு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரம் தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், ஆதீன பொது மேலாளா் கோதண்டராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கெளரவிப்பு: முன்னதாக, வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து பாத யாத்திரை புறப்பட்ட தருமபுரம் ஆதீனம், வழியில் குடமுழுக்கு விழாவுக்கு சிறப்பாக பணியாற்றிய வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் காவல்துறையினரை கெளரவித்து அருட்பிரசாதங்கள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com