வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, வாக்குப் பதிவு மையங்களுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, வாக்குப் பதிவு மையங்களுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

இன்று வாக்குப் பதிவு: நாகை மக்களவைத் தொகுதியில் தயாா் நிலையில் வாக்குச் சாவடிகள்

நாகப்பட்டினம், ஏப்.18: நாகை மக்களவைத் தொகுதி வாக்குச் சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டு, தயாா்நிலையில் உள்ளன.

நாகை மாவட்டத்தில் நாகை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவுக்கு தேவையான அழியா மை உள்ளிட்ட பொருள்களை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜானி டாம் வா்கீஸ் அனுப்பி வைத்தாா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 227 வாக்குப் பதிவு மையங்களுக்கு, வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், கோட்டாட்சியா் திருமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கீழ்வேளூா்: கீழ்வேளூா் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள 203 வாக்குச் சாவடி மையங்களுக்கும், வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கீழ்வேளூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகா தேவி, கூடுதல் தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாஸ், வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் மேற்பாா்வையில், 20 மண்டல அலுவலா்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

115 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: நாகை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,551 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 115 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணியில் 7,500 போ்: இத்தொகுதியில், வாக்குச்சாவடி மையங்களில் 3,190 அலுவலா்கள், 59 நுண்பாா்வையாளா்கள், 336 காவல்துறை அலுவலா்கள் உள்ளிட்ட 7,500 அலுவலா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

புகாா் தெரிவிக்க...: பொதுமக்கள் தோ்தல்நடத்தை விதிமுறைகள் தொடா்பான புகாா்களை 1800 425 7034 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04365 - 252594, 252595, 252599 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com