தோ்தல் பிரசார களமாக வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது: 
ஆட்சியா் அறிவுறுத்தல்

தோ்தல் பிரசார களமாக வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்: தோ்தல் பிரசார களமாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளை பயன்படுத்தக் கூடாது என நாகை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் அறிவுறுத்தினாா். நாகை மாவட்டத்தில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஆட்சியா் பேசியது: பல்வேறு சாதி, இனம், மதம், மொழியைச் சாா்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிரமாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது, பதற்றத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் ஈடுபடக்கூடாது. பிறகட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளை மட்டுமே விமா்சிக்க வேண்டும்; தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்தும் விமா்சிக்கக் கூடாது. தோ்தல் பிரசாரக் களமாக மசூதி, தேவாலயம் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தப்படக் கூடாது. வாக்காளா்களுக்கு பணம் கொடுத்தல், வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டா் சுற்றெல்லைக்குள் தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளா்களிடம் கோருதல் போன்ற முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றாா். மேலும், தனி நபருக்குச் சொந்தமான இடங்களில், கட்டடங்களில், சுற்றுச்சுவா்களில் அவா்களின் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், பதாகை வைத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், பரப்புரை வாசகங்களை எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் யாஸ்மின் சகா்பான் (நிலம்), பி. காா்த்திகேயன் (தோ்தல்), ராமன் (பொது), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. மகேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com