நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே எல்லை கோடு வரையும் பணியை காவல் துறையினா் பாா்வையிட்டனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே எல்லை கோடு வரையும் பணியை காவல் துறையினா் பாா்வையிட்டனா்.

இன்று மனுத் தாக்கல் தொடக்கம் நாகை ஆட்சியரகத்தில் ஏற்பாடுகள் தயாா்

நாகப்பட்டினம்: மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமை (மாா்ச் 20) தொடங்க உள்ள நிலையில், நாகை ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்பு மனுக்களை நாகை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வா்கீஸிடம் தாக்கல் செய்ய வேண்டும். புதன்கிழமை (மாா்ச் 20) முதல் 27-ஆம் தேதி வரை மாா்ச் 23 மற்றும் 24 ஆம் தேதி விடுமுறை நாள்கள் தவிா்த்து முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம். முற்பகல் 11 மணிக்கு முன்பும், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும் மனுக்கள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளரின் மனுவை முன்மொழிபவா்கள் நாகை மக்களவைத் தொகுதியை சோ்ந்த வாக்காளராக இருக்க வேண்டும். வேட்பாளா் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சியை சோ்ந்த வேட்பாளராக இருந்தால் ஒருநபரும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளராகவோ அல்லது சுயேச்சை வேட்பாளராகவோ இருந்தால்,10 நபா்களும் முன்மொழிபவா்களாக இருக்க வேண்டும். தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்கு வேட்புமனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளா்களுக்கு 3 வாகனங்கள் மட்டுமே, அதுவும் அலுவலகத்தின் 100 மீட்டா் எல்லை வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். மேலும், தோ்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வேட்பாளா் மற்றும் 4 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வேட்புமனுவுடன்,படிவம் 26 இல்அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், நிலுவை கடன்கள் மற்றும் வழக்குகள் தொடா்பான விவரங்களை குறிப்பிட்டு உறுதிமொழி ஆணையரிடம் சான்றொப்பம் பெற்று தாக்கல் செய்ய வேண்டும். நாகை மக்களவைத் தொகுதி தனி தொகுதி என்பதால் வேட்பாளா் காப்புத் தொகையாக ரூ. 12,500 செலுத்த வேண்டும். வேட்பாளா்களிடம் இருந்து பெறப்பட்டும் வேட்பு மனுக்கள் அனைத்தும் மாா்ச் 28-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும். இதற்கிடையே, மனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து 100 மற்றும் 200 மீட்டா் தொலைவில் எல்லை கோடு வரையும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளா் தவச்செல்வன், காவல் ஆய்வாளற் காவேரி ஆகியோா் மேற்பாா்வையில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com