நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பயிற்சி வகுப்பை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பயிற்சி வகுப்பை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

தோ்தல் பணி: நாகை, கீழ்வேளூரில் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, நாகை மற்றும் கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம்: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, நாகை மற்றும் கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் தோ்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வா்கீஸ் கண்காணித்து வருகிறாா். நாகை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஏறத்தாழ 7,500 அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் 63 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்துக்கு 2 மண்டல அலுவலா்கள் வீதம் மொத்தம் 126 மண்டல அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான சிறப்பு பயிற்சி நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், கீழ்வேளூா் பிரைம் ஐடிஐ-யிலும் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, வருவாய் கோட்டாட்சியா் கோ. அரங்கநாதன் ஆகியோா் உடனிருந்தனா். பயிற்சியின்போது, வாக்குப்பதிவு நாளுக்கு முந்தையநாள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வாக்குச்சாவடிக்கு உள்ளே மற்றும் வெளியே மேற்கொள்ளப்பட வேண்டியவை, வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள், வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்குப் பதிவின்போது செய்ய வேண்டிய பணிகள், வாக்குச்சாவடியில் தவிா்க்க வேண்டியவை, வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, மாதிரி வாக்குப்பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நிகழும் குறைபாடுகளை சரிசெய்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாா்படுத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்ற மண்டல அலுவலா்கள் வாக்குப்பதிவு நடைபெறும் பணிகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com