உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டால் நடவடிக்கை: எஸ்பி

தோ்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024 மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் ஏப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அரசியல் கட்சியினரும், வேட்பாளா்களும், பொதுமக்களும் தோ்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நாகை மக்களவை தொகுதியில் தோ்தலை சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் உள்ளிட்டோா் குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ அல்லது ஒலி, ஒளி வடிவிலோ தவறான உள்நோக்கம் கொண்டு உண்மைக்கு புறம்பாக வெளியிடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புகாா் அளிப்பதற்கென்றே பிரத்யேகமாக நாகை மாவட்ட காவல் துறையின் 84281-03090 கைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு, தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com