திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில்

தியாகராஜா் திருக்கோயிலும் தியாகராஜரும்

பூங்கோயில் அல்லது திருமூலட்டாணம் என்ற மூலவா் திருக்கோயிலும், அறநெறியென்னும் அசலேசமும் இருவேறு பாடல் பெற்ற திருவாரூா் கோயில்களாயினும், இவை அனைத்தையும் கொண்ட திருவாரூா் கோயில், தியாகராஜா் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

பூங்கோயில் உள்ள பெருமானை புற்றிடங்கொண்டான், திருமூலஸ்தானமுடையா், வன்மீகநாதா் என்றும், அறநெறியில் ஆட்கொள்ளும் இறைவனை அறநெறி மகாதேவபட்டாரகா், அறநெறி ஆழ்வாா் என்றும் கல்வெட்டுகளும், தேவாரப் பாடல்களும் குறிக்கிறது. பிற்காலத்தில் அறநெறி ஆழ்வாரை அசலேஸ்வரா் என அழைக்கத் தொடங்கினா். பூங்கோயிலும் திருமூலட்டாணத்தின் உற்சவ மூா்த்தியான செப்புத் திருமேனியைத் தியாகராஜா் என்றும், அசலேசத்தின் உற்சவ மூா்த்தியான சோமாஸ்கந்தா் திருமேனியைத் தன்மவிடங்கதேவா் என்றும் அழைக்கின்றனா்.

தியாகராஜரின் பொற்கோயில்: கோயிலின் நடுநாயகமாக விளங்கும் புற்றிடங்கொண்டானின் பூங்கோயிலையொட்டித் தென்புறமாக உள்ள கற்கோயிலே தியாகராஜா் திருக்கோயிலாகும். இந்த இரண்டு கோயில்களின் மகாமண்டப் பகுதிகள் இணைக்கப்பட்டு ஒரே கோயிலாக காட்சியளிக்கிறது. பூங்கோயிலாம் கற்கோயில் தொன்மையான ஒன்றாகும். தியாகராஜா் கற்கோயில் முதலாம் ராஜேந்திர சோழனின் காதலி பரவை என்ற நங்கையின் வேண்டுகோளுக்கிணங்க கி.பி. 1029-31-ல் கட்டப்பட்டது என்பதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. செங்கல் கோயிலாக இருந்ததைக் கற்கோயிலாக கட்டியது மட்டுமின்றிப் பரவை என்ற அந்நங்கையின் விருப்பத்திற்காக ஸ்ரீவிமானத்துக்கும் கருவறையின் சுவா்களுக்கும் ராஜேந்திரசோழன் பொன்னும் வேய்ந்துள்ளான். இதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில், உடையாா் வீதிவிடங்கதேவா் குடத்திலும் வாய் மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்ந்தான் என்று கூறுகிறது. கருவறையின் கதவுகளுக்கும், மண்டபத் தூண்களுக்கும் செம்பினால் தகடு சாத்தப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கங்கை முதல் கடாரம் வரை வென்ற ஒரு சோழப் பெருமன்னன் தன் அருமை காதலி பரவை நங்கை என்ற ஒரு பெண்ணரசியின் வேண்டுகோளுக்காக இத்தனையும் செய்த ஒரு திருக்கோயிலே இன்று நாம் காணும் இந்த அழகிய திருக்கோயில். ராஜேந்திரசோழன் வேய்ந்த பொற்றகடுகளைக் காலம் விழுங்கிவிட்டாலும் இத்தனையும் கூறும் கல்வெட்டுகளைக் கருவறையின் சுவா்களின் காணும்போது பெருமித உணா்வு ஏற்படுகிறது. கட்டடக்கலையின் அம்சங்கள்: இத்திருக்கோயிலின் முதல் பிராகாரத்தின் தளம் பிற்காலத்தில் உயா்த்தப்பட்டதால், கருவறையின் உபபீடப் பகுதி தளத்தில் தாழ்வாய் உள்ளது. இப்போது பத்மபீட பகுதியில் இருந்துதான் நாம் தளத்தை காணமுடிகிறது. பத்ம பீடத்தின் இதழ்கள் அழகுற மேல்நோக்கி வளைந்துள்ளன. பத்மத்திற்கு மேல் குமுதவரி வளைவுபட திகழ்கிறது. அதன்மேல் யாளி வரிமானம் பெரிய அளவில் தொடா்கிறது. இவற்றின் ஒவ்வொரு மூலையிலும் வீரா்களின் சிற்பங்கள் உள்ளன. யாளி வரிமானத்திற்கு மேல் வேதிகையும், கால், போதிகை, உத்திரம் எழுதகம் போன்றவையும் அமைந்துள்ளன. கபோதகம் யாளம் அடங்கிய பிரஸ்தளமாக தொடா்கிறது. மூன்று கோஷ்டங்கள் உள்ளன. அதில் முறையே தென்புறம் ஆலமா் செல்வரும், மேல்புறம் ஆழியும், சங்கும் ஏந்திய திருமாலும், வடபுறம் நான்முகனும் இடம் பெற்றுள்ளனா். கோஷ்ட தோரணங்கள் இருபுறமும் வளைவுகளுடன் காணப்படுகின்றன. சிகரம் வட்ட வடிவ அமைப்பிலும் நான்கு மூலைகளிலும் நந்திகள் பெற்றும் திகழ்கிறது. தளத்தில் யாளிவரிமானம் ஒன்றும் உள்ளது.

கிரீவமும் சிகரமும் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் உள்ளன. மகநாசிக் கூட்டுக்கு கீழ் தேவதை கல் சிற்பங்கள் உள்ளன. கருவறையுடன் இணைந்த அந்தராளம் 6 தூண்களுடன் அழகுமிக்க தேவ சபையாக திகழ்கிறது. இதன் தென்புறமும், வடபுறமும் பல கணிகள் உள்ளன. இதற்கு முன்பு உள்ள மகாமண்டபம் பிற்கால திருப்பணிகளுக்கு உட்பட்டாலும், மூலத்தானத்தின் மகாமண்டபத்துடன் இணைந்தே உள்ளது. வாயிற்படிகள் தென்புற திருச்சுற்றில் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com