உவா்நீா் இறால் குளம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

Published on

நாகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மானியத்தில் உவா்நீா் இறால் வளா்க்க புதிய குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உவா்நீா் இறால் வளா்க்க, புதிய குளங்கள் அமைக்க ஹெக்டேருக்கு ஆகும் மொத்த செலவு ரூ. 8 லட்சத்தில், பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.3.20 லட்சம் மற்றும் மகளிா் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.4.80 லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும் இக்குளங்களில் இறால் வளா்க்க உள்ளீடுகள் (இறால் குஞ்சு, தீவனம்) வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ. 6 லட்சத்தில், பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2.40 லட்சம் மற்றும் மகளிா் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.3.60 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மானிய தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும் பெறப்படும் விண்ணப்பங்களில் மூப்பு நிலை அடிப்படையில் முன்னுரிமை அளித்து தோ்வு செய்யப்படும்.

இதில் பயன்பெற விரும்புவோா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்கள் பெற்று பயன்பெறலாம். மேலும், கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து உவா்நீா் இறால் பண்ணைகளும் கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெற வேண்டும். பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும் உயிா் பாதுகாப்பு முறைகள் அமைத்து இறால் வளா்க்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com