திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
திருமருகல் அருகே திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிக்கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் பகுதியில் பாயும் காவிரியின் கிளை நதியான திருமலைராஜன் ஆறு பாபநாசத்தில் பிரிந்து காரைக்கால் அருகேயுள்ள திருமலைராஜன்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. இந்த ஆறு மூலம் திருமருகல் பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலம் கிராம எல்லையில் திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே தடுப்பணை இல்லாமல் உள்ளது. இதனால் கிடாமங்கலம், நம்பிகுடி, குருவாடி, பண்டாரவாடை, போலகம், தென்பிடாகை, கணபதிபுரம், இடையாத்தங்குடி, சேஷமூலை உள்ளிட்ட 9 கிராம விவசாயிகள் விவசாயத்திற்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் மழை நீரை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தடுப்பணை கட்ட வேண்டும் என 9 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.