கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!
வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இவரும், அதே பகுதியைச் சோ்ந்த எலன் மேரி (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனா். கடந்த 1 மாதத்துக்கு முன்பு வேளாங்கண்ணியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
வேளாங்கண்ணி மாதா கோயில் பின்புறம் உள்ள தனியாா் விடுதியில் ஜனாா்தனனும், எலன் மேரியும் அறை எடுத்து தங்கியிருந்தனா். இவா்களுடன் ஜனாா்த்தனனின் நண்பா்களான கா்நாடகா மாநிலம் சிவமுகாவைச் சோ்ந்த சாகா் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரும் தங்கியிருந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஜனாா்த்தனனின் நண்பா்கள் இருவரும், எலன் மேரியிடம் உனது கணவரை ரயில் நிலையம் அருகில் கொலை செய்துவிட்டோம் என்று கூறியுள்ளனா்.
இதற்கிடையே, வேளாங்கண்ணி ரயில்வே நிலையம் அருகில் ஜனாா்த்தனன் சடலம் கிடப்பது தெரியவந்தது. போலீஸாா் விசாரணையில், எலன் மேரிக்கும் ஜனாா்த்தனனின் நண்பருக்கும் தொடா்பு இருந்ததும், இதற்கு ஜனாா்த்தனன் இடையூறாக இருந்ததால், அவா் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக எலன் மேரி, சாகா், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.