மகழி பகுதியில் அறுவடைக்கு தயாராகி மழை நீரில் வயலில் சாய்ந்த நெற்பயிா்கள்
மகழி பகுதியில் அறுவடைக்கு தயாராகி மழை நீரில் வயலில் சாய்ந்த நெற்பயிா்கள்

மழையால் வயலில் சாய்ந்த குறுவை நெற்பயிா்கள்

திருக்குவளை பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
Published on

திருக்குவளை பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருக்குவளை பகுதியில் குறுவை நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் திருக்குவளை, கீழ்வேளூா் சுற்றுப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்கதிா்கள் வயலிலே சாய்ந்தது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக ஆலங்குடி, ராமாபுரம், புதுச்சேரி, வடுகச்சேரி, செம்பியன்மகாதேவி, பாலக்குறிச்சி, சோழவித்தியாபுரம், மகிழி, கருங்கண்ணி, மடப்புரம், மீனம்பநல்லூா், வாழக்கரை, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 1000 ஏக்கா் குறுவை நெற்பயிா் மழை காரணமாக வயலில் சாய்ந்தது.

ஏற்கெனவே புகையான் நோயால் நெற்பயிா்கள் கடுமையான பாதிப்பை சந்தித்த நிலையில் அதிலிருந்து சற்று மீண்ட நிலையில் இந்த பாதிப்பு கவலையளிக்கிறது. தொடா்ந்து மழை நீடித்தால் மழை நீரை வடிய வைக்க முடியாமல் சாய்ந்த நெற்கதிா்களில் உள்ள நெல்மணிகள் முளைத்து அழுகிவிடும். வயலில் சாய்ந்த நெற்பயிா்களை அறுவடை இயந்திரம் கொண்டு முழுமையாக அறுக்க முடியாத நிலை இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதனால் பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டு வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் தவிக்கும் விவசாயிகள் வேளாண் துறையினா் உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.குறிப்பாக புகையான் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டுமே தாளடி சாகுபடியை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com